ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு: 24 மணி நேரத்தில் 2 முறை ஆலோசனை

ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு: 24 மணி நேரத்தில் 2 முறை ஆலோசனை
Updated on
1 min read

பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, அந்தக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆர்எஸ்எஸ் தலைவர்களை சனிக்கிழமை மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை காலை ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை ராஜ்நாத் சிங் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மக்களவைக்கு ஒன்பது கட்டங்களாக நடைபெறும் தேர்தல் திங்கள்கிழமை நிறைவடைகிறது.

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட 41 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த இறுதி கட்டத்துக்கான தேர்தல் பிரச்சாரம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

பிரச்சாரம் முடிந்ததும் சனிக்கிழமை மாலை டெல்லி வந்த நரேந்திர மோடி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டுக்குச் சென்று அவரிடம் ஆசி பெற்றார். தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் முன்பும் அவரைச் சந்தித்து ஆசி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்து புறப்பட்டு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் சேர்ந்து டெல்லி ஜண்டேவாலனில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்குச் சென்று அதன் தலைவர் மோகன் பாகவத், பையாஜி ஜோஷி, பாஜக விவகாரங்களைக் கவனிக்கும் சுரேஷ் சோனி ஆகியோரைச் சந்தித்து இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்குச் சென்ற பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் அங்கு பையாஜி ஜோஷி, சுரேஷ் சோனி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகள் மூடிய அறையில் ரகசியமாக நடந்ததாக ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் நிறைவடைவதால் பாஜகவின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து மோடி, ராஜ்நாத்சிங் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in