

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்க மாநில வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் நைஹாட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது: “திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர், மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன்தான் மோத வேண்டும். எதற்காக பாஜகவுடன் மோதுகிறீர்கள்? பாஜகவுடன் மோதாதீர்கள்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந் தவுடன், மேற்கு வங்க மாநிலத்தில் வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுப்போம்.
அதோடு, வங்கதேசத்தி லிருந்து வந்து மேற்குவங்கத் தில் சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையாகப் பேசி வருகிறார்.
அதற்கு பதிலடியாக சமீபத்தில் அந்த மாநிலத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்த நரேந்திர மோடி, “மம்தா வரைந்த ஓவியம் ஒன்று 1.80 கோடிக்கு விலை போயுள்ளது. அவ்வளவு பணம் கொடுத்து வாங்கியவர் யார் என்ற விவரத்தை வெளியிட வேண்டும்” என்று பேசினார்.
மோடியின் இக்கருத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மோடி மன்னிப்புக் கேட்காவிட்டால், அவர் மீது அவதூறு வழக்கு தொடருவோம் என்றும் அக்கட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில், தேர்தலுக்குப் பின்பு திரிணமூலுடன் கூட்டணி சேர்வதற்கு அச்சாரமாக, அக்கட்சி தொடர்பாக மென்மையான அணுகுமுறையை பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கின் இப்போதைய பேச்சு அமைந்துள் ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.