

தேர்தல் ஆணையர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் விளக்கமளித்துள்ளார்.
வாரணாசி மக்களவைத் தொகுதியில் பாஜக பிரச்சாரத்தை மாற்று இடத்தில் நடத்துமாறு அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. பின்னர் சில நிபந்தனைகளுடன் கடைசி நேரத்தில் பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பாஜக தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்தது. இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என தேர்தல் ஆணையர் பிரம்மா தெரிவித்திருந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வி.எஸ்.சம்பத் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்: "வாரணாசி உள்பட எந்த விவகாரத்திலும் தேர்தல் ஆணையர்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் ஏற்பட்டதில்லை. அனைத்து முடிவுகளும் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டது" என்றார்.
ராகுல் மீது நடவடிக்கை இல்லை:
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் உள்ள வாக்குசாடிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டார் என்று பாஜக தேர்தல் ஆணையத்திற்க்கு புகார் அளித்தன.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் கூறியதாவது: "அமேதியில் ஓட்டுச்சாவடிக்குள் சென்று ஓட்டுபதிவு இயந்திரத்தை ராகுல் பார்வையிட்டபோது, அது செயல்பாட்டில் இல்லை என்பதை உறுதி செய்துள்ளோம், அந்த புகைப்படத்தை வெளியிட்ட புகைப்படக்காரரும் அதை உறுதி செய்துள்ளார். எனவே விசாரணை அடிப்படையில் ராகுல்காந்தி தேர்தல் விதிமுறையை மீறவில்லை என்று தெரியவந்ததால் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.
ஆனால் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் போதே மோடி செய்தியாளர்களிடம் பேசினார். அதனாலேயே அவரது செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது எனவும் சம்பத் விளக்கமளித்துள்ளார்.