

சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் 1588 தபால் வாக்குகளை காலை 8 மணிக்கு எண்ண ஆரம்பித்த ஊழியர்கள், மாலை 4 மணிக்கு தான் எண்ணி முடித்தனர். 8 மணி நேர காலதாமதத்திற்கு பின் முடிவு வெளியிட்டனர். இதில் அதிமுக வுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தைப் பிடித்தது செல்லாத வாக்குகள்.
ஆட்சியர் ஹனீஸ் ஷாப்ரா முன்னிலையில் முதலில் தபால் வாக்குகளை ஊழியர்கள் எண்ண ஆரம்பித்தனர். மொத்தம் 1588 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. எப்போதும் தபால் வாக்குகள் முன்னதாக எண்ணப்பட்டு, தபால் வாக்கில் எந்த கட்சியினர் முன்னணி இடம் பிடித்தனர் என்பதை அறிவிப்பது வழக்கம். ஆனால், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில், தபால் வாக்குகளை எண்ணும் பணியில் மிகவும் தொய்வு ஏற்பட்டது. காலை 8 மணிக்கு கவர்களை பிரித்து தபால் வாக்குகளை, ஒவ்வொன்றாக எண்ண ஆரம்பித்தனர் ஊழியர்கள்.
காலை 10 மணி, 11, மணி, 12 மணி என ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நிருபர்கள் தபால் வாக்கு எண்ணிக்கை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர். ஆனால், தபால் வாக்குகளை ஊழியர்கள் எண்ணி முடிக்கவில்லை என்ற பதிலே வந்தது. இறுதியாக மாலை 4 மணிக்கு 1588 தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, 8 மணி நேரம் காலதாமதமாக முடிவுகளை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தபால் வாக்கில் அதிமுக வேட் பாளர் பன்னீர்செல்வம் 485 வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் உமாராணி 384 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 179 வாக்குகளும், நோட்டாவிற்கு 24 வாக்குகளும் கிடைத்தன. செல் லாத வாக்குகள் எண்ணிக்கை 466.