

தேர்தல் ஆணைய நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு மேலும் 3 நாள்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த மே 1-ம் தேதி இமாச்சலப் பிரதேசம் சோலன் பகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஜப்பானைச் சேர்ந்த சிலர் என்னிடம் பேசியபோது இந்தியாவில் சாலை வசதி உள்ளிட்ட பணிகளுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் இந்தியாவில் அமைதி நிலவுமா என்பது சந்தேகமாக உள்ளது என்று குறிப்பிட்டனர். இந்த அச்சம் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. ஒருவேளை பாஜக ஆட்சிக்கு வந்தால் மக்களிடம் வெறுப்புணர்வு வளர்க்கப்படும், வன்முறை வெடிக்கும், 22,000 பேர் கொல்லப்படுவார்கள் என்று ராகுல் தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக சார்பில் தேர்தல் ஆணையத் திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனை பரிசீலித்த ஆணையம், கடந்த மே 9-ம் தேதி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் மே 12-க்குள் ராகுல் பதில் அளிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ராகுல் தரப்பில் கூடுதல் அவகாசம் அளிக்கும்படி ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட ஆணைய அதிகாரிகள் மேலும் 3 நாள்கள் அவகாசம் அளித்துள்ளனர். இதன்படி மே 15-க்குள் ராகுல் பதில் அளிக்க வேண்டும்.