

நடிகர் விஜயகாந்த் போல் உங்களை அடிக்க மாட்டேன். தாராளமாக பேசும்போது, கைதட்டி விசில் அடிக்கலாம் என்று நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரத்தில் பேசி கலகலப்பூட்டினார்.
ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.செல்வகுமார சின்னையனை ஆதரித்து நடிகை விந்தியா காங்கயம் பகுதியில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு பிரச்சாரம் செய்தார்.
திருப்பூர் சாலையில் நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டபோது, காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் பிரச்சார வாகனத்தில் ஏறி, நடிகை விந்தியா பேசும்போது பேச்சிற்கு இடையூறாக விசில் அடித்து, கைதட்டி தொல்லை தரக் கூடாது என்று வேண்டுகோள்விடுத்தார்.
இதையடுத்து, மைக்கை வாங்கிய நடிகை விந்தியா, நான் பேசும் போது தொண்டர்கள் ஆர்வமிகுதியால் எப்போது வேண்டுமானாலும் தாராளமாக விசில் அடித்து, கைதட்டலாம். நான் விஜயகாந்த் போல் தொண்டர்களை அடிக்க மாட்டேன். தொடர்ச்சியாக நாலு வார்த்தை பேச முடியாமல், திணறவும் மாட்டேன் என்று கூறி பேச்சைத் துவங்கினார்.
அவர் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் பணம் உள்ளவர்களுக்கு தான் சீட்டு தருகிறது. இன்னும் சில கட்சிகளில் மாமன்-மச்சான், மகன் ஆகியோருக்கு சீட்டு தருகிறார்கள். ஆனால், அதிமுகவின் ஜெயலலிதா மட்டும் தான் தகுதியானவர்களை வேட்பாளர் ஆக்கியுள்ளார்.
ஒவ்வொரு பெற்றோரும் மகளுக்கு கணவனை தேர்வு செய்வது போல், ஜெயலலிதா வேட்பாளரை தேர்வு செய்துள்ளார். அவர்களை நீங்கள் வெற்றிபெறச் செய்தால் உங்களுக்காக உழைப்பார்கள்.
நடிகர் விஜயகாந்தை சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா கூட்டணியில் சேர்த்து எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கொடுத்தார். ஆனால், விஜயகாந்த் ஜெயலலிதாவை எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து விட்டு, நாடாளுமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற தைரியம் உள்ளதா என்று கேட்கிறார்.
உங்கள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 14 வேட்பாளர்களும் டெபாசிட் வாங்க முடியாது. அதிமுக வெற்றி பெற்றால், காவிரி நீர் தமிழகம் வரும், இலங்கை பிரச்சினை தீரும், மீனவர்கள் கஷ்டம் குறையும், தமிழக மக்கள் நன்மை அடைந்தது போல், இந்திய மக்களும் நன்மை அடைவார்கள் என்றார்.