காங். கூட்டணி ஆட்சி அமைக்கும்: அகமது படேல் நம்பிக்கை

காங். கூட்டணி ஆட்சி அமைக்கும்: அகமது படேல் நம்பிக்கை
Updated on
1 min read

காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரும் மூத்த தலைவருமான அகமது படேல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “272-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மூன்றாவது ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறிருக்க எதற்காக மூன்றாவது அணிக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்?

இப்போதைக்கு இந்த கேள்வியே எழவில்லை. எனினும், இது தொடர்பாக கட்சியின் செயற்குழு உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்து சோனியா காந்தி இறுதி முடிவை எடுப்பார். அதே சமயம், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிராக எழும் அதிருப்தி மக்களிடையே இருப்பதை ஒப்புக் கொள்கிறேன்.

தேர்தல் களத்திலிருந்து எங்களுக்கு கிடைக்கும் தகவல்கள் ஊக்கமளிப்பதாக உள்ளன. மோடி அலை வீசுவதாக கூறுவது தவறான கருத்து. கிராமப்புறங்களுக்கு நீங்கள் சென்று பார்த்தால், உண்மையை உணர்வீர்கள். இந்த தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வி அடையும். எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதுதான் பாஜகவின் தலைவிதி. நரேந்திர மோடியின் பொதுக்கூட்டங்களுக்கு அதிக கூட்டத்தை திரட்ட, அக்கட்சி பெரும் தொகையை செலவிட்டு வருகிறது. மன்மோகன் சிங் பலவீனமான பிரதமர் என்ற கருத்து தவறானது. இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்.

எதிர்காலத்தில் கட்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளிப்பது தொடர்பாக பிரியங்கா வதேராதான் முடிவு செய்ய வேண்டும். தற்போதைக்கு ரே பரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்வதாக அவரே கூறியுள்ளார். தேர்தலில் ஆதாயம் பெறும் நோக்கத்துடன் சோனியா குடும்பத்தின் நற்பெயரை களங்கப்படுத்த வதேரா விவகாரத்தை பாஜக கிளப்பி வருகிறது. இந்த சதிச் செயலுக்கு வதேரா பலிகடா வாக்கப்பட்டுள்ளார்” என்றார் அகமது படேல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in