

தமிழகம் வளம் பெற திமுக ஆதரவுடன் மத்தியில் அரசு அமைய வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்துள்ளேன். மக்களிடையே பெரும் எழுச்சி காணப்படுகிறது.
தமிழகம் முழுவதும் மின் தட்டுப்பாடு, குடிநீர் பிரச்சினை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நடுத்தர, ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகம் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் பின்தங்கிவிட்டது. புதிய திட்டங்களோ தொழில்களோ தொடங்கப்படவில்லை. தமிழகத்துக்கு வர வேண்டிய தொழிற்திட்டங்கள் அரசின் ஒத்துழைப்பின்மையால் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன.
அதிமுகவுக்கு ஆதரவளித்தால், அவர் மூலம் அமையும் மத்திய ஆட்சி நிலையற்ற ஆட்சியாக விளங்கும். தன் மீதான வழக்குகளை வாபஸ் பெற மத்திய அரசை நிர்ப்பந்திப்பார். சேது சமுத்திரத் திட்டம் நிரந்தரமாக முடக்கப்படும். துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் முடக்கப்பட்டதுபோல், மத்திய அரசின் மூலம் தமிழகத்துக்குக் கிடைக்கும் வளர்ச்சித் திட்டங்களும் கிடைக்காமல் போகும் என்பதை உணர வேண்டும்.
அதேநேரத்தில் திமுக பெரும் வெற்றிபெற்று, நம் ஆதரவுடன் மத்திய ஆட்சி அமைந்தால், எண்ணற்ற திட்டங்களை நாம் வலியுறுத்திப் பெறலாம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தியதுபோல், நதிநீர் இணைப்புக்கான முயற்சிகள் எடுக்கப்படும், தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவோம். தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு பெற முயற்சி செய்வோம். மெட்ரோ திட்டத்தை செயல்படுத்தியதுபோல் புதிய ரயில் வழித் தடங்களை தமிழகத்தில் ஏற்படுத்த முயற்சி செய்வோம். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முழு முயற்சி மேற்கொள்ளப்படும். திமுகவுக்கு வாக்களித்தால் மத்தியில் நிலையான மதச்சார்பற்ற மாநில நலன் காக்கும் அரசு அமையும் என்பதை மக்களிடம் விளக்க வேண்டும்.
முரண்பட்ட கொள்கைகளை உடைய பாஜக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பது நிச்சயம். ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதை விழிப்புடன் கண்காணித்து தடுத்து நிறுத்துங்கள். நம் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் 40 தொகுதிகளிலும், ஆலந்தூர் சட்டசபை இடைத் தேர்தலிலும் வெற்றிக் கனியைப் பறிக்க அயராது பாடுபடுங்கள்.
இவ்வாறு அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முரண்பட்ட கொள்கைகளை உடைய பாஜக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பது நிச்சயம். ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதை விழிப்புடன் கண்காணித்து தடுத்து நிறுத்துங்கள்.