

# முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பியுள்ள தொகுதியான இங்கு, தொழில் வளம் அறவே இல்லை. வாசுதேவநல்லூரில் மட்டும் பெயரளவுக்கு ஒரு தனியார் சர்க்கரை ஆலை இயங்குகிறது. தற்போது விவசாயமும் நலிந்துவரும் நிலையில், பிழைப்புக்காக மக்கள் பக்கத்து மாநிலங்களை நாடிச்செல்லும் நிலை உள்ளது. இதுவரை எந்த எம்.பி-யும் தொழில் ஆதாரங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மக்களின் ஆதங்கம்.
# ஆறு முறை இங்கு வெற்றிபெற்று முன்னாள் அமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியின் அருணாச்சலம், ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்தப் பகுதியில் பூக்கள் அதிகம் விளைவதால் சென்ட் தொழிற்சாலை கொண்டுவருவேன் என்று சொல்லியே ஓட்டு வாங்கி வெற்றிபெற்றார். ஆனால், அவரும் அவருக்குப் பின்பு வந்தவர்களும் அதனை நிறைவேற்றவே இல்லை.
# இரு மாநிலங்களை இணைக்கும் சாலைப் போக்குவரத்து, எந்த அளவுக்கு மக்களுக்கு உபயோகமாக இருக்கிறதோ அந்த அளவுக்குத் தலைவலியையும் தந்துகொண்டிருக்கிறது. காரணம், மலைப் பகுதியில் அகலமற்ற சாலைகள் அபாயகரமானதாக இருக்கின்றன. தமிழக எல்லையைக் கடந்து சென்றதும் ஆரியங்காவு என்ற இடத்தில் உள்ள குறுகிய பாலம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
# ரயில் சேவையைப் பொறுத்தவரை மத்திய அரசு இந்தப் பகுதியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே அணுகுகிறது என்பது தொகுதி மக்களின் குற்றச்சாட்டு. செங்கோட்டையிலிருந்து சென்னைக்குத் தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் சென்றுவரும் நிலையில், ஒரே ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. பல முறை போராட்டங்கள் நடத்தியும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படவில்லை.
# கேரள மாநிலம், புனலூரை இணைக்கும் ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்ற நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 300 கோடி ரூபாயில் பணிகள் தொடங்கப்பட்டு, ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. உரிய காலத்தில் பணிகள் முடியாததால், திட்ட மதிப்பீடு 600 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது. ஆனால், இந்த நிதியாண்டில் 20 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. இதனால், திட்டம் நிறைவேற மேலும் பல ஆண்டுகள் ஆகும் என்று கவலை தெரிவிக்கின்றனர் மக்கள்.
# குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். முன்பெல்லாம் இங்கு வெளிநாட்டினரின் வருகை அதிகம் இருந்தது. ஆனால், இப்போது அது வெகுவாகக் குறைந்துவிட்டது. காரணம், முகம் சுளிக்கவைக்கும் சுகாதாரக் குறைபாடுகள். போதிய போக்குவரத்து வசதிகளும் இல்லை. உலகச் சுற்றுலா வரைபடத்தில் குற்றாலத்தை இடம்பெறச் செய்வோம் என்கிற வாக்குறுதி மட்டும் ஒவ்வொரு முறையும் சீசன் காலத்தில் நடக்கும் அரசு விழாக்களில் தரப்படுகிறது.
# தென்காசி - திருநெல்வேலி 52 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கை. தூத்துக்குடி - கொச்சி ஆகிய இரு துறைமுக நகரங்களை இணைக்கும் பிரதான சாலை இது. இதில் அந்த 52 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை மட்டும் மாநில நெடுஞ்சாலைத் துறை வசமிருக்கிறது. துறைமுகங்களுக்குச் சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் லாரிகள் அதிகம் பயணிக்கும் இந்தச் சாலையில், போதிய அகலம் மற்றும் பராமரிப்பு இல்லாததால் இங்கு நடக்கும் விபத்துகளும் போக்குவரத்து நெரிசலும் அதிகம். எனவே, விரைவில் இந்தச் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும்.
# கடையநல்லூரில் சுமார் 5,000 ஏக்கரில் திராட்சை விவசாயம் நடக்கிறது. ஆனால், விற்பனை மையம் மற்றும் குளிர்பதனக் கிடங்கு இல்லாததால் விவசாயம் நசிவடைந்துவருகிறது. இங்கு தென்னை விவசாயமும் கணிசமாகச் செய்கின்றனர். தென்னை சார்ந்த தொழிலை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
# ராஜபாளையத்தில் புறவழிச் சாலை, ரயில்வே மேம்பாலம் மற்றும் நலிவடைந்துவரும் பஞ்சு மார்க்கெட் போன்றவை முக்கியப் பிரச்சினைகளாக உள்ளன. 2000-ம் ஆண்டுக்குப் பின்பு ராஜபாளையம் நெருக்கடி மிகுந்த நகரமாகிவிட்டது. தொழிற்சாலைகள், கல்லூரிகள், பள்ளிகள் அதிகமாகிவிட்டன. அனைத்து வாகனங்களுமே தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் பயணிக்க வேண்டியிருப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புறவழிச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டது. ராஜபாளையம் சஞ்சீவி மலை அடிவாரம் வழியாகப் புறவழிச் சாலை ஒன்றும், வில்லிபுத்தூரிலிருந்து மேற்குப் பகுதி வழியாக புறவழிச் சாலை ஒன்றும் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும், பணிகள் நடக்கவில்லை. இதனால் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன.
# கேரள மாநிலம் மற்றும் குற்றாலம் செல்லும் பிரதானச் சாலையில் 24 மணி நேரமும் லாரி, பேருந்து மற்றும் சுற்றுலா வாகனங்கள் தொடர்ச்சியாகப் பயணிக்கின்றன. எனவே, புறவழிச்சாலை அமைத்தால் மட்டுமே பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும்.