

தெலங்கானா பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மீது, தெலங்கானா வாதிகள் முட்டைகளை வீசினர். இது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ஆதிலாபாத் மாவட்டம் பெல்லம்பல்லியில் புதன்கிழமை திறந்த வேனில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது திடீரென கூட்டத்தில் இருந்து சிலர் நாயுடுவை நோக்கி முட்டைகளை வீசினர். ஆனால் முட்டைகள் அவர் மீது விழவில்லை.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த தெலுங்கு தேசம் கட்சியினர், முட்டை வீசியவர்களை தாக்க தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீஸார் விரைந்து சென்று முட்டை வீசிய தெலங்கானாவாதிகள் மூவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 3 நாட்களுக்கு முன்னர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் மீது, தெலங்கானாவாதிகள் மது பாட்டில், மாங்காய்களை வீசி தாக்குதல் நடத்தினர்.