

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வடோதரா தொகுதியில், மோடியின் படம் இடம்பெற்றுள்ள ஆயிரத்துக்கும் அதிமான பேனர்கள் மற்றும் போஸ்டர்களை மறைக்கும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இந்த பேனர்களும், போஸ்டர்களும் வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்பதால் அவற்றை மறைக்க கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தொண்டர்கள் தெரிவித்தனர்.
நரேந்திர மோடி வடோதரா தொகுதியில் இன்று (புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரூ.70 லட்சத்தை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
வடோதரா நகரத்தில் எங்கு திரும்பினாலும் பாஜக பேனர்களே அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. சில நாள்களுக்கு முன் தங்களுக்கு விளம்பரம் செய்ய இடம் ஒதுக்காததால் ஆத்திரமுற்ற காங்கிரஸ் வேட்பாளர் மதுசூதன் மிஸ்திரி, மோடி போஸ்டர் மீது தனது போஸ்டரை ஒட்டினார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.