

தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் முன்பே காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் வெற்றி அறிவிப்பு பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். பேனரை அச்சிட்ட நிறுவனம் சீல் வைக்கப் பட்டது. இதுபற்றி விசாரித்து அறிக்கை அனுப்புமாறு காஞ்சிபுரம் ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வேட்பாளர் மீது எப்.ஐ.ஆர். போட முகாந்திரம் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியிட்டு திங்கள்கிழமை டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டது. அதில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. வாக்கு எண்ணிக்கைக்கு ஏறக்குறைய 20 நாட்கள் உள்ள நிலையில், வெற்றி பேனர் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புகாரின்பேரில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் பானு தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று 4 பேனர்களை பறிமுதல் செய்தனர். அதை ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர் பரிமளம் மீது விஷ்ணுகாஞ்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய டிஜிட்டல் பேனரை அச்சிட்ட நிறுவனம் காஞ்சிபுரம் மடத்து தெருவில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. செவ்வாய்க்கிழமை அங்கு போலீஸாருடன் சென்ற வட்டாட்சியர் பானு, டிஜிட்டல் பேனர் அச்சிட்ட நிறுவனத்துக்கு சீல் வைத்தார். நிறுவனத்தில் இருந்த உரிமையாளர் கோபிநாத், அவரது உதவியாளர் எத்திராஜ் ஆகியோரை போலீஸாரிடம் ஒப்படைத்தார். பின்னர் டிஜிட்டல் பேனர்களை ஏற்றி வந்த வாகனத்தின் உரிமையாளர் சண்முகம், அந்த வாகனத்தின் ஓட்டுநர் வெங்கடேஷ் உள்பட அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
தேர்தல் ஆணையத்தில் புகார்
இந்நிலையில் வெற்றி அறிவிப்பு பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையர் சம்பத்திடம் காஞ்சிபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பெ.விஸ்வநாதன் எம்.பி. புகார் மனு அளித்துள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சிபுரம் நகர திமுக செயலர் சேகர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ் வாய்க்கிழமை புகார் அளித்தார்.
வேட்பாளர் மீது எப்.ஐ.ஆர்.?
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக 1.68 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை காஞ்சிபுரம் நகரில் வைத்ததாக தேர்தல் ஆணையத்துக்கு திமுக தரப்பில் புகார் செய்யப்பட்டது. அது பற்றி விசாரிக்குமாறு தேர்தல் ஆணையம் எங்களுக்கு தகவல் அனுப்பியது. இதைத் தொடர்ந்து அதுபற்றி விசாரித்து அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின் மீது விசாரித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறோம். அந்த பேனரை அச்சிட்டவர், அச்சிட ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் அந்த வேட்பாளர் மீது எப்ஐஆர் போடப்படும். வேட்பாளர் மீது எப்ஐஆர் போட முகாந்திரம் உள்ளது. வெற்றி பேனர் வைப்பது கருத்துக் கணிப்பு நடத்துவதற்கு சமமானது.
இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.