

தேர்தல் பிரச்சாரத்துக்காக சீக்கிய மதத்தின் புனிதப் பாடலை மாற்றிப் பாடியதற்காக பஞ்சாப் வருவாய் துறை அமைச்சர் விக்ரம் சிங் மஜிதியா மதக் கோட்பாட்டுக்கு எதிரானவர் என்று சீக்கிய குருத்வாரா அறிவித்துள்ளது.
பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சிரோமணி அகாலி தளத்தைச் சேர்ந்த மாநில வருவாய் துறை அமைச்சர் விக்ரம் சிங் மஜிதியா அண்மையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது சீக்கியர்களின் புனிதப் பாடல்களில் ஒன்றான குர்பானியை அவர் அருண் ஜேட்லியின் பெயரை பயன்படுத்தி மாற்றிப் பாடினார். இந்த விவகாரம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சீக்கிய மதத் தலைமை அமைப்பான ஜாதேதார் அகாலி தத்திடம் அமைச்சர் விக்ரம் சிங் மஜிதியா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இதனிடையே மும்பையில் உள்ள சீக்கிய குருத்வாரா, அமைச்சர் மஜிதியா மதக்கோட்பாட்டுக்கு எதிரானவர் என்று அறிவித்துள்ளது. அந்த குருத்வாராவுக்கு மஜிதியா மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று குருத்வாரா அறிவித்துள்ளது.
மேலும் சீக்கிய மதத் தலைமை அமைப்பான ஜாதேதார் அகாலி தத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் விரைவில் கூடி, மஜிதியா குறித்து முடிவெடுக்க திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் மஜிதியாவை போலீஸார் தொடர்ந்து கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர் தனது வாக்குச் சாவடிக்குள் மட்டுமே பயணம் மேற்கொள்ளலாம். இதர பகுதிகளுக்கு செல்லக்கூடாது என்றும் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.