

திமுக ஆட்சிக் காலத்தில்தான் மிகப் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கி சமூக நீதி போற்றப்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ‘‘இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி கபட நாடகம் ஆடுகிறார். இலங்கைக்கு எதிராக சட்ட சபையில் ஒரு தீர்மானம்கூட நிறைவேற்றவில்லை’’ என்று கூறியுள்ளார். 1956-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி சிதம்பரத்தில் நடந்த திமுக பொதுக்குழுவில் அண்ணா முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்தவனே நான்தான். தொடர்ந்து எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆட்சியையே இழந்திருக்கிறோம்.
ஆனால், ‘விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புலிகள் அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியதும், யுத்தம் நடைபெறும்போது பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று கூறியவரும் ஜெயலலிதாதான்.
திமுக ஆட்சியில் கட்டிய தலைமைச் செயலகத்தில் 6 துறைகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. மற்ற துறைகளுக்கு அங்கு இடமில்லாததால் அங்கும் இங்கும் அலைய நேரிட்டதால் புதிய கட்டிடத்தைப் பயன்படுத்தவில்லை என்கிறார். கோடநாட்டில் இருந்து நிர்வாகம் பண்ணும்போது இங்கிருந்து பண்ண முடியாதா?
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தியது எம்.ஜி.ஆர். என்று ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் 1970-ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக நாட்டிலேயே முதல்முறையாக கமிஷன் அமைத்து, 25% என இருந்ததை 31% என உயர்த்தி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுத்ததே திமுக அரசுதான். பின்னர் 1980-ல் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் 50% ஆனது.
மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20%, பழங்குடியினருக்குத் தனியே 1%, சிறுபான்மையினரான இஸ்லாமியருக்கு 3.5%, தாழ்த்தப் பட்டோருள் மிகவும் தாழ்த்தப்பட்டோராக உள்ள அருந்ததியருக்கு 3% என இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு சமூக நீதி போற்றப்பட்டது திமுக ஆட்சிக் காலத்தில்தான்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.