

சென்னையில் கொசு பிரச்சினையைப் போக்குவதற்கு அதிமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மு.க.ஸ்டா லின் ஏழுகிணறு பகுதியில் பேசிய தாவது:
திமுக ஆட்சியில் வியாபாரி களின் நலனுக்காக கொத்தவால் சாவடி மார்க்கெட்டை மாற்றி, உலகிலேயே மிகப்பெரிய மார்க் கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் அமைக்கப்பட்டது. தற்போது வியாபாரிகள் முதல் அனைத்து தரப்பினரும் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். சென்னை மாநகரம் சீர்கெட்டுவிட்டதற்கு பல உதாரணங்கள் உண்டு. கொசு பிரச்சினையைப் போக்கவில்லை. இதற்கு முந்தைய திமுக ஆட்சிதான் காரணமென்று மேயர் துரைசாமி கூறுகிறார்.
சென்னையின் கொசு பிரச்சினைக்கு உதாரணமாக கடந்த மார்ச் 23ல் ’தி இந்து’தமிழ் பத்திரிகையில் ஒரு செய்தி வந்துள்ளது. சென்னை விருகம் பாக்கத்தைச் சேர்ந்த நடேசன் என்ற வாசகர், கொசு பிரச்சினையால் எப்படி மக்கள் அவதிப்படு கிறார்கள் என்பதைக் கடிதமாக எழுதி, அத்துடன் பல ஆயிரக்கணக் கான கொசுக்களைப் பிடித்து, அதை பொட்டலமாக பத்திரிகை அலுவலகத்துக்கு ஆதாரமாக அனுப்பியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் நீர் தேங்கும் இடங்களையும், கொசு உற்பத்திப் பகுதிகளையும் சீர் செய்யப்போவதாகக் கூறி ஹெலிகாப்டரில் ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வைத் தொடர்ந்து நீர்த்தேக்கங்களை சீரமைக்க 5 கோடி ரூபாயை ஒதுக்கினார். இதில் ஒரு திட்ட மாவது நிறைவேற்றப்பட்டதா என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால், நான் அரசியலில் இருந்தே விலகத் தயாராக இருக்கிறேன் என்றார்.
பின்னர் சிந்தாதிரிப்பேட்டையில் பிரச்சாரத்தில் பேசியதாவது:
தேர்தலுக்காக மட்டும் உங்களை சந்திக்க வருவோர் நாங்களல்ல. எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காலத்திலும் உங்களோடு வரக் கூடியவர்கள் நாங்கள். முதல்வர் ஜெயலலிதாவைப் போல் நான் இங்கு ஹெலிகாப்டரில் வரவில்லை. உங்களை நேரடியாக சந்தித்து திமுகவுக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் எந்த நலத் திட்டங்களையும் அவர் மேற் கொண்டதில்லை. 3 மாதங்களில் மின் வெட்டைத் தீர்ப்போம் என்றார். ஆனால், 3 ஆண்டுகளாகியும் மின்சாரம் இல்லாத நிலைதான் உள்ளது.
அதனால்தான் அவர் மக்களைச் சந்திக்க அச்சப்படுகிறார். எனவே தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் திமுக வேட்பாளரை வெற்றி பெற வையுங்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், மத்திய சென்னை பொறுப்பாளர் மு.க.தமிழரசு ஆகியோர் ஸ்டாலினுடன் பிரச்சார வேனில் வந்தனர்.