

தாளவாடி, ஆசனூர், கடம்பூர், பர்கூர் ஆகிய மலைக்கிராமங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பலர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
ஈரோடு மாவட்ட மலைக்கிராமங்களில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது, அடையாள அட்டை இல்லாதது போன்ற காரணங்களால் தேர்தலில் பலரும் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
குறிப்பாக, பர்கூர் மலைப்பகுதியில் உள்ள பர்கூர் வாக்குச்சாவடியில் 150 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் இன்றி திரும்பிச்சென்றனர். கொங்காடை மற்றும் சோளகனை கிராமத்தில் 150 பேருக்கும், கத்திரிமலையில் 175 பேருக்கும், கொங்காடை கிராமத்தில் 300 பேருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாததால் அவர்கள் வாக்களிக்க முடியவில்லை. இதனால் மலை கிராமங்களில் குறைந்த அளவே வாக்காளர்கள் வாக்களித்தனர்.
கத்திரி மலையில் இருந்து வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் பேருந்து வசதி செய்திருந்தது. இருப்பினும், அடையாள அட்டை இல்லாததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வாக்குச்சாவடி தொலைவாக இருந்த நிலையில், வாகனங்களில் ஆட்களை அழைத்து வரக்கூடாது எனும் தடையுத்தரவு காரணமாக பலர் வாக்களிக்க வரவில்லை.
குறிப்பாக, தம்புரெட்டி பகுதி வாக்காளர்கள் சுமார் 60 பேர் இருந்தும், தாமரைக்கரை வாக்குச்சாவடிக்கு ஒருவர் கூட வரவில்லை. தம்புரெட்டியிலிருந்து தாமரைக்கரைக்கு 15 கி.மீ என்பது குறிப்பிடத்தக்கது. கத்திரிமலைக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்ததைப்போல இதுபோன்ற பகுதிகளுக்கும் தேர்தல் ஆணையமே ஏற்பாடு செய்திருக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.