

பதவி நாற்காலியைப் பிடிப்பது மட்டுமே சில கட்சிகளின் நோக்கமாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். ஒடிசா மாநிலம் காரியார் நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது பாஜக மற்றும் மாநில ஆளும் பிஜு ஜனதா தளத்தை பெயர் குறிப்பிடாமல் அவர் குற்றம்சாட்டினார். அவர் பேசியதாவது:
நாடு இப்போது கடினமான காலகட்டத்தில் உள்ளது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் சிலர் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். அதை நம்பி மக்கள் ஏமாந்துவிடக் கூடாது.
கனவு உலகத்தை உங்கள் கண் முன்னே கொண்டு வருவார்கள். ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களின் ஒரே நோக்கம் எப்படியாவது பதவி நாற்காலியைப் பிடிக்க வேண்டும். மக்க ளுக்குச் சேவை செய்வது அவர்களின் நோக்கமில்லை. ஏழைகள், தலித்துகள், பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்டோரின் பாதுகாவலனாக காங்கிரஸ் விளங்குகிறது.
ஒடிசா மாநிலம் நியம்கிரி மலைப் பகுதி தனியார் சுரங்க நிறுவனத்துக்கு அளிக் கப்பட இருந்ததை எதிர்த்து மக்களோடு மக்களாக இணைந்து ராகுல் காந்தி போராடினர். அதன் பயனாக நியம்கிரி மலை காப்பாற்றப்பட்டது. 1967-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒடிசா மாநிலத்தின் வறட்சியைப் போக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். களஹந்தி பகுதியில் இந்திராவதி நீர்ப்பாசன திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார்.
இப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏழைகளுக்காக உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் பழங்குடியின மக்களுக்காக வன உரிமை சட்டமும் இயற்றப்பட் டுள்ளது.
ஒடிசா மாநிலத்துக் காக மத்திய அரசு தாராளமாக நிதி ஒதுக்கியுள்ளது. பாஜக தலைமையிலான கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் ஒதுக்கப் பட்ட நிதியைவிட இப்போது கூடுதல் நிதி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஊழல் பெருங்கடல் என்று ஒருவர் (முதல்வர் நவீன் பட்நாயக்) குற்றம் சாட்டியுள்ளார். ஒடிசாவில் மதிய உணவுத் திட்டம் முதல் அனைத்து திட்டங்களிலும் ஊழல் கரை புரண்டோடுகிறது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு ஒதுக்கப்படும் உணவு தானியத்தில்கூட ஊழல் நடந்திருப்பதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.