

கர்நாடகாவிலிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 55 பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் 30 பேர் மீது கொலை முயற்சி, பெண்கள் மீதான தாக்குதல், கொலை மிரட்டல் போன்ற குற்றச்செயல்களின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளன.
கர்நாடக தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான அமைப்பு இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கு நடக்கும் இந்த தேர்தலில் பல கட்சிகளை சேர்ந்த 435 பேர் போட்டியிடுகின்றனர்.
இது தொடர்பாக கர்நாடக தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பின் நிறுவனர் திருலோச் சன் சாஸ்திரியிடம் 'தி இந்து' சார்பாக பேசினோம். அவர் கூறியதாவது: ''2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் 42 பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த முறை 55 வேட்பாளர்கள் மீது வழக்குகள் உள்ளன.
அதிகபட்சமாக பெங்களூர் தெற்கு தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கியுள்ள ஸ்ரீ0ராம சேனைத் தலைவர் பிரமோத் முத்தாலிக் மீது கொலை முயற்சி வழக்கு,தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 8 கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. பெல்லாரி தொகுதியில் பா.ஜ.க. சார்பாக களமிறங்கியுள்ள முன்னாள் அமைச்சரும் ரெட்டி சகோதரர்களின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீராமுலு மீது கொலை முயற்சி வழக்கு, கடத்தல் வழக்கு, இயற்கை வளங்களை சுரண்டியது உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ளன. தார்வாட் தொகுதியில் போட்டியிடும் கர்நாடக மாநில பா.ஜ.க.தலைவர் பிரஹலாத் ஜோஷி மீது கனரா வங்கியில் பணம் கொள்ளையடித்த வழக்கு இருக்கிறது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பி.சி.மோகன், சுரேஷ் அங்காடி உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.
தேவகவுடா கட்சியில் 8 பேர் மீது வழக்கு
பா.ஜ.க.விற்கு அடுத்த இடத்தில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இருக்கிறது. இக்கட்சி சார்பாக சிக்பளாபூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் குமாரசாமி, பாலாசாகேப் பாட்டீல் உள்ளிட்ட 8 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
காங்கிரஸ் சார்பாக கர்நாடகாவில் களமிறங்கியுள்ள 28 வேட்பாளர்களில் 6 பேர் குற்ற வழக்குகளில் சிக்கி உள்ளனர்' என்றார் திருலோச்சன் சாஸ்திரி