

தென் தமிழக மீனவர்களின் வாழ்வை, வரலாற்றுப் பின்னணியில் ஆராய்ந்து இரண்டு சிறந்த நாவல்களை எழுதியவர் ஜோ டி குரூஸ். இவரது இரண்டாவது நாவலான கொற்கைக்கு சென்ற ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. இவரது முதல் நாவலான ஆழி சூழ் உலகு, ஆங்கிலத்தில் நவயானா பதிப்பகம் வாயிலாக வெளிவர இருந்த நிலையில், பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை ஆதரித்து ஜோ டி குரூஸ் கருத்து வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து நவயானா பதிப்பகம் தங்கள் அரசியல் நிலைப்பாடுக்குப் பொருந்தாத சார்பை எழுத்தாளர் எடுத்திருப்பதால் நாவல் வெளியீட்டு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்தது. இந்நாவலை மொழிபெயர்த்த எழுத்தாளர் வ. கீதா ஜோ டி குரூசின் மோடி ஆதரவு வருத்தத்தை அளிப்பதாகக் கூறி தனது மொழிபெயர்ப்பைத் தர மறுத்துள்ளார். படைப்பு வேறு, படைப்பாளி வேறு என்றும், படைப்பிலிருந்து படைப்பாளியைத் தனியாகப் பார்க்க இயலாது எனவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் நவயானா பதிப்பகத்தின் சார்பில் எஸ். ஆனந்த், மொழிபெயர்ப்பைப் பதிப்பிப்பது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார். ஒரு மொழிபெயர்ப்பாளரும், பதிப்பாளரும் இதுபோன்ற நிலைப்பாட்டை எடுக்க முடியுமா என்ற கேள்வியை முன்வைத்து பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் விமர்சகரின் கருத்துகள்:
கல்யாண் ராமன், மொழிபெயர்ப்பாளர்
மொழிபெயர்ப்பாளர் என்பவர் படைப்பைச் சொந்தம் கொண்டாட வாய்ப்பில்லை. எனவே அதோடு அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. இந்த விலகல் உணர்வு மொழிபெயர்ப்பாளருக்கு இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட வகைமையைச் சேர்ந்த பதிப்பகங்கள் தாங்கள் வெளியிடும் நூல்கள், ஆசிரியர்கள் குறித்துக் கருத்து நிலை சார்ந்த நிலைப்பாடுகளை எடுப்பதற்கான அவசியம் இருப்பதையும் நாம் மறுக்க முடியாது.
சா. தேவதாஸ், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர்
‘ஆழிசூழ்உலகு’ மற்றும் ‘கொற்கை’ என்னும் இரு நாவல்களும் இந்திய அளவில் முக்கிய சமூக ஆவணங்களாக இருக்கும் தகுதியுடையவை.
கத்தோலிக்கத்தின் மீது அதிருப்தியும் கோபமும் கொள்ளும் ஒருவரது குழப்ப நிலையிலான சாய்வே, இந்துத்துவ மேடைகளைப் பயன்படுத்துவதும், மோடி அலையில் விழுவதும். ஜோ டி குரூஸை இதன் பொருட்டு விமர்சிக்கலாமே தவிர அவரது படைப்பின் மொழிபெயர்ப்பை வெளியிடுவதில்லை என்று தீர்மானிப்பது துரதிருஷ்டமானது.
‘குளத்தங்கரை அரசமரம்’ என்னும் முதல் சிறுகதையைத் தமிழுக்கு அளித்துள்ள வ.வே.சு. அய்யர் தன் குருகுலப் பள்ளியில் வர்ணாஸ்ரம தர்மம் பேணியவர்தான். ஒருவரது முரண்பட்ட வாழ்க்கை நடவடிக்கைகளை விமர்சனத்துக்குட்படுத்துவது அவசியம். பிரச்சினைகளைத் தாண்டிய அவர்களது படைப்புகளைப் புறக்கணிக்க வேண்டாம். படைப்புகளிலும் பிரச்சினைகள் எழும்போது விமர்சிக்கலாம். தடை செய்ய வேண்டாம்.
கண்ணன்,காலச்சுவடு பதிப்பாளர்
கருத்துச் சுதந்திரத்தில் நமக்குள்ள பற்றுதல் நாம் கடுமையாக முரண்படும் கருத்தைப் பிறர் பதிவு செய்யும்போதே வெளிப்படும். மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா, பாஜக வேட்பாளராகக் கேரளத்தில் போட்டியிட்டவர். இதனால் அவர் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளை வெளியிட நாங்கள் தயங்கவில்லை. இப்போது ‘கொற்கை'யின் ஐந்தாம் பதிப்பு அச்சில் உள்ளது.
மேலும் கடந்த ஆண்டுகளில் ஜோ டி குருசின் பார்வையில், செயல்பாடுகளில் ஒளிமறைவு எதுவும் இருக்கவில்லை. மோடியை ஆதரித்து இன்று அவர் அறிக்கை வெளியிட்டதற்கு முந்தைய படிநிலைகளைப் பார்க்க மறுத்தவர்கள் இப்போது அதிர்ச்சி அடைவதற்கு குரூசைப் பொறுப்பாக்க முடியாது. அவர்கள் பார்க்க மறுத்ததின் பின்னுள்ள இடதுசாரி அடையாள அரசியலின் போதாமைகளும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
எஸ்.ஆனந், நவயானா பதிப்பாளர்
முதலில் பதிப்பாளராக இந்த முடிவில் என்னுடைய பங்கு மிகவும் குறைவானது. டி குரூசின் நாவலை மொழிபெயர்த்த வ. கீதா தனது மொழிபெயர்ப்பை திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டார். ஒருவரின் மொழிபெயர்ப்புப் பிரதி அதை மொழிபெயர்ப்பவரின் அறிவுச் சொத்து. இதுபோன்ற விஷயங்களில் முடிவு எடுப்பதில் இருக்கும் சிக்கலை நான் உணரவே செய்கிறேன். ஆனால் நவயானா என்பது ஒரு கொள்கை நிலைப்பாடு சார்ந்த அரசியல் பதிப்பகம்.
ஒரு வாசகராக ஒரு படைப்பைப் பார்க்கும் அதே பார்வையில் ஒரு பதிப்பாளராக என்னால் பார்க்க இயலாது. நவயானா முன்னிறுத்தும் அரசியலுக்கு ஒவ்வாத ஒரு ஆசிரியரின் படைப்பை வெளியிட வேண்டாம் என நாங்கள் எடுத்த முடிவை மீண்டும் பரிசீலிக்கவே செய்கிறேன். ஆனால் அதற்கு ஜோ டி குரூசும் ஒத்துழைக்க வேண்டும். அவரைத் தொடர்ந்து நானும், மொழிபெயர்ப்பாளரும் தொடர்புகொள்ள முயல்கிறோம். ஆனால் அவர் எங்களிடம் பேசாமல் ஊடகங்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.