

குஜராத்தில் அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த நரேந்திர மோடியை ஆதரிப்பதன் மூலம் இனி ராஜபக்சே மற்றும் ஈழத் தமிழர்கள் நலன் குறித்தும் பேசும் உரிமையை, தகுதியை வைகோ இழந்து விட்டார் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன்.
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கோ.பழனிச்சாமியை ஆதரித்து திட்டச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
“தற்போது நடைபெறவுள்ளது ஓட்டப் போட்டியோ அல்லது மல்யுத்தமோ அல்ல. சுமார் 5,000 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தியாவை ஆளும் தகுதியான நபரைத் தேர்வு செய்யும் தேர்தல்.
ஒரு தரப்பினர் ஏதோ அலை வீசுவதாகவும், பிரதமராகி விட்டார் எனவும் தகவல்களை பரப்பி வருகின்றனர். அலை வீசுவது உண்மை என்றால் ரஜினிகாந்தையும், விஜயகாந்தையும் வீடு வீடாகச் சென்று சந்திக்க வேண்டிய அவசியம் என்ன.
மக்களுக்கு 20 கிலோ அரிசி, ரூ.5-க்கு சாம்பார் சாதம், மாணவர்களுக்கு காலணிகள் வழங்குவதையெல்லாம் தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வருவது நகைப்புக்குரியதாக உள்ளது. நடைபெறவுள்ளது மக்களவைத் தேர்தல், நீங்கள் முன்னிருத்தும் பிரதமர் என்பதை தெரிவிக்காமல், செய்வீர்களா, செய்வீர்களா என ஜெயலலிதா மக்களிடம் கேட்பதில் அர்த்தம் இல்லை.
நாட்டில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல்களில் திமுகவின் பங்கு மிக அதிகம். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.75 லட்சம் கோடி ஊழல் செய்தது திமுக. இந்த தேர்தலில் திராவிடக் கட்சிகளை மக்கள் ஆதரித்தால், அந்த கட்சியினர் தான் சுயலாபம் அடைவார்கள். மக்களுக்கு நன்மை எதுவும் கிடைக்காது.
நூற்றுக்கும் அதிகமான மதத்தினர் வாழும் இந்தியாவில் மதசார்பற்ற, ஊழலற்ற மத்திய அரசு அமைய மக்கள் இடதுசாரிகளை ஆதரிக்க வேண்டும்” என்றார் தா.பாண்டியன்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் எம்.செல்வராசு, கீழ்வேளுர் எம்.எல்.ஏ. நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசுகிறார் தா.பாண்டியன்.