மோடியின் பிரச்சாரத்துக்கு அதானி செலவு செய்கிறார்: குஜராத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
“தொழிலதிபர் அதானியுடன் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூட்டணி வைத்துள்ளார். பிரதிபலனை எதிர்பார்த்து மோடியின் பிரச்சார செலவுகளை அதானி ஏற்றுவருகிறார்” என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
குஜராத் மாநிலம் அம்ரேலியில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச் சாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
தொழிலதிபர் அதானியுடன் நரேந்திர மோடி கூட்டணி வைத்துள்ளார். அதானி யின் கூட்டணிக்காக எல்.கே.அத்வானி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, சுஷ்மா சுவராஜ் போன்ற பாஜகவின் மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.
மின்சாரம் சப்ளை செய்வதற்காக அதானியின் நிறுவனத்துக்கு, மோடி ரூ.26 ஆயிரம் கோடி ஒப்பந்தம் அளித்துள்ளார். இதுதவிர மலிவான விலையில் நிலம் வழங்கியதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு மேலும் ரூ.10 ஆயிரம் கோடி தரப்பட்டுள்ளது. இந்த நிலம் உங்களுக்கு சொந்தமானது.
ரூ.3 ஆயிரம் கோடியாக இருந்த இந்த நிறுவனத்தின் சொத்துகள், தற்போது 40 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அதானிக்கு மோடி அரசு அளித்த பணம்தான், மோடியின் பிரச்சாரத்துக்கு செலவிடப்படுகிறது. நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் விளப்பரப் பலகைகள் வைக்கின்றனர். இதற்கான பணம் எங்கிருந்து வருகிறது? என கேள்வி எழுப்பினார் ராகுல்.
இதற்கு முந்தைய கூட்டத்தில் ராகுல் பேசுகையில், “மோடியின் பிரச் சாரத்துக்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. இங்கிருந்து ஒலிக்கும் ஒரு குரல் எதற்கெடுத்தாலும் நான், நான், நான் என்கிறது. குஜராத் மக்கள் எதுவும் செய்யவில்லையா? குஜராத்தின் பால் உற்பத்தியை பற்றி பேசும் மோடி, “நாடு முழுவதற்கும் நான் பால் சப்ளை செய்கிறேன்” என்கிறார். இதை குஜராத் பெண்கள் செய்யவில்லையாம்.
லட்சக்கணக்கான பசுக்களை இவர்தான் வரிசை யில் நிற்க வைத்து, பால் கரந்து, நாடு முழுவதற்கும் தருகிறாராம். கடந்த 60 ஆண்டுகளாக நீங்கள் எதுவுமே செய்ய வில்லை என்கிறார் இவர். குஜராத்தில் 6 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆனால் குஜராத்தில் விவசாயிகள் தற்கொலை இல்லை என நாடு முழுவதும் பொய் சொல்கிறார் மோடி.
ஒரு பெண்ணின் தொலைபேசி உரையாடலை குஜராத் போலீஸார் பதிவு செய்கின்றனர். அப்பெண் என்ன செய்கிறார் என்று போலீஸாரை கண் காணிக்கச் சொல்கிறார் மோடி. ஆனால் இவர்கள் தான் பெண்களை அதிகாரம் பெறச்செய்யப் போவதாக டெல்லியில் போஸ்டர் ஒட்டுகின்றனர். நாட்டின் பெண்களுக்கு அதிகாரம் தேவையில்லை. அவர்கள் ஏற்கெனவே அதிகாரம் மிக்கவர்களாக உள்ளனர். முதலில் அவர்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள்” என்றார் ராகுல்.
குஜராத்தில் 26 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி மேலும் 2 கூட்டங்களில் பேசவிருக்கிறார் ராகுல்.
