

தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட எதிரணி தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவு உள்ளதாக, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.
தற்போது தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மோடி, ஏ.என்.ஐ. டெலிவிஷன் நெட்வொர்க்-குக்கு அளித்த பேட்டியில், தன்னைப் பொறுத்தவரையில் அரசியலில் விரோதியோ, தீண்டத்தகாதோரோ யாருமில்லை என்று குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நீங்கள் சென்னை வந்த அதே நாளில், உங்களை முதல்வர் ஜெயலலிதா விமர்சித்தாரே? என்ற கேள்விக்கு, "நாங்கள் அரசியலில் கொள்கை ரீதியில் வேறுபட்டு ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொண்டாலும், தனிப்பட்ட முறையில், எனக்கு அவருடனான நல்லுறவு மிகச் சிறப்பாகவே உள்ளது" என்றார்.
அரசியல் ரீதியில் எதிர் துருவமான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன்கூட தனிப்பட்ட முறையில் நல்லுறவைப் பேணுவதாக குறிப்பிட்ட அவர், "நாங்கள் கொள்கை ரீதியில் வேறுபட்டு இருக்கலாம். ஆனால், ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரிடமும் தனிப்பட்ட முறையில் நல்லுறவு கொண்டிருக்கிறேன். இதுதான் நமது ஜனநாயகத்தின் மேன்மை" என்றார்.
டிவி9 சேனலுக்கு அளித்த வேறொரு பேட்டியில், நீங்கள் பிரதமாரானால் ராபர்ட் வதேரா மீது வழக்கு தொடர்வீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு, "எந்த ஓர் அரசும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுப்படவே கூடாது. சட்டம் அதன் கடமையை செய்ய வேண்டும்" என்றார் மோடி.