

# தொண்டி பழமையான துறைமுக நகரமாகும். பர்மா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தேவகோட்டை, காரைக்குடி, நாட்டரசன் கோட்டை, செட்டிநாடு, பள்ளத்தூர் ஆகிய ஊர்களுக்குக் கப்பல் மூலம் தேக்கு மரங்கள் இந்தத் துறைமுகம் வழியாகக் கொண்டுவரப்பட்டன. காலப்போக்கில் இந்தத் துறைமுகம் இயற்கைச் சீற்றங்களால் சாதாரண கடற்கரையாக உருமாறிவிட்டது. இங்கு மீண்டும் சிறு துறைமுகம் அமைக்கப்பட்டால் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் வளர்ச்சி பெறும்.
# சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ராமேஸ்வரம் - தனுஷ்கோடிக்குப் படகுப் போக்குவரத்து, அலைச் சறுக்கு விளையாட்டு ஆகியவற்றைக் கொண்டுவரலாம். இதனால், அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன் உள்ளூர் மக்களும் வேலைவாய்ப்பு பெறுவர்.
# கடந்த 30 ஆண்டுகளில் இலங்கைக் கடற்படையினரால் ராமநாதபுரம் மீனவர்கள் சுமார் 300 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 200 பேர் காணாமல் போயுள்ளனர். சுமார் 100 பேர் ஊனமுற்றி ருக்கிறார்கள். இந்த நிலை இன்னமும் நீடிக்கிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்.
# ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி, மூக்கையூரில் மீன்பிடித் துறைமுகங்கள், கடல் அட்டை மீதான தடை நீக்கம், மீன் பதப்படுத்தும் நிலையங்கள், டீசல் மானிய உயர்வு என மீனவர்களின் கோரிக்கைகள் எதுவுமே இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
# புண்ணியத் தலமான ராமேஸ்வரத்துக்குத் தினசரி ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றார் கள். அவர்களுக்கான அடிப்படை வசதிகள் மிகவும் குறைவு. இங்கு பாதாளச் சாக்கடைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ராமநாத சுவாமி கோயிலைச் சுற்றியுள்ள தனியார் தங்கும் விடுதிகள் சில தங்களது நிலத்தடி கழிவுநீர்த் தொட்டிகளின் இணைப்புகளை நேரடியாகக் கடலில் இணைத்துள்ளன. இதனால் புனிதமான அக்னி தீர்த்தத்தில் கழிவுகள் கலக்கின்றன. மேலும், பக்தர்கள் அக்னி தீர்த்தத்தில் நீராடும்போது நெரிசலில் அவதிப்படுகின்றனர். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி இதற்குத் தீர்வுகாண வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை.
# ராமேஸ்வரம், ஏர்வாடி தர்கா, ஓரிங்கர் தேவாலயம், மன்னார் வளைகுடா தீவுகள், பாம்பன் பாலம், தனுஷ்கோடி இவற்றை மையமாகக்கொண்டு ஒருங் கிணைந்த சுற்றுலாத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
# ராமேஸ்வரத்திலிருந்து கோவைக்கு மீட்டர் கேஜ் வழித்தடம் இருந்தபோது தினந்தோறும் ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால், அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு, கோவைக்கு வாராந்திர ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்குச் செல்லும் இரண்டு ரயில்கள் அதிகாலை 4 மணிக்கும், காலை 10.30 மணிக்கும்தான் ராமேஸ்வரத்துக்கு வருகின்றன. இதனால், காலையில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்பவர்களுக்குப் பலன் இல்லை. ரயில் நேரங்களை மாற்ற வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
# பாம்பன் நூற்றாண்டு விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சென்னை - ராமேஸ்வரத்துக்குப் புதியதாக பாம்பன் எக்ஸ்பிரஸ் இயக்க வேண்டும். மீன்களை ஏற்றுமதி செய்ய வசதியாக அதில் குளிரூட்டப் பட்ட சரக்குப் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதுவும் கிடப்பில் உள்ளது.
# ராமநாதபுரத்தில் இன்றும் பல கிராமங்களில் குடிநீர் கிடையாது. காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் எப்போதாவதுதான் தண்ணீர் வருகிறது என்கின்றனர் மக்கள். வைகை ஆற்றை ஒட்டிய கிராமங்களில் ஊற்றுகளைத் தோண்டி மணிக்கணக்கில் காத்திருந்து தண்ணீர் சேகரிக்கின்றனர் மக்கள்.
# பருவ மழை பெய்தால் மட்டுமே இங்கு விவசாயம் சாத்தியம். தொகுதி முழுக்கவே வறட்சி நிலவுகிறது. வெள்ளக் காலங்களில் வைகையில் இருந்து கடலுக்குச் செல்லும் தண்ணீரை ராமநாதபுரம் மாவட்டத்தின் கண்மாய்களுக்குத் திருப்பிவிட்டாலே மாவட்டத்தின் விவசாயம் மற்றும் குடிநீர்ப் பிரச்சினை தீரும்.
# இங்கு பல்கலைக்கழகம், தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இதனாலேயே இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. தொழிற்சாலைகளையும் பல்கலைக்கழகத்தையும் நிறுவினால், தொகுதியில் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி பெறும்.