

சர்ச்சைக்குரிய 'பழிதீர்த்தல்' கருத்தைத் தெரிவித்த நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், குஜராத் முன்னாள் அமைச்சருமான அமித் ஷாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
அமித் ஷா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்கான முகாந்திரம் இருப்பதாக, அந்த நோட்டீஸில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
'தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக, உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது' என்பதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று அமித் ஷாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டது.
அமித் ஷா தனது நிலை குறித்து இம்மாதம் 9-ம் தேதி மாலை 5 மணிக்கு முன்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமீத் ஷா, "இந்த தேர்தலில்தான் நமது கவுரவம் அடங்கியுள்ளது. நமக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு பழிதீர்த்துக்கொள்ளும் வகையில் இந்த தேர்தல் அமைந்துள்ளது. அநீதியை இழைத்தவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்து, முஸ்லிம் மக்களிடையே பலமுறை கலவரம் ஏற்பட்டுள்ள உத்தரப் பிரதேசத்தில், அமித் ஷா இவ்வாறு கூறியிருப்பதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய அமித் ஷாவை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்த தேர்தலில் காங்கிரஸை பழிவாங்க வேண்டும் என்ற கருத்தைத்தான் மோடி தெரிவித்தார் என்றும், குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு எதிராக அவர் எதையும் தெரிவிக்கவில்லை என்று பாஜக கூறியுள்ளது.
இதனிடையே, அமித் ஷாவின் சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய சி.டி.யையும், அந்தச் சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கையையும் புது டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் அனுப்பிவைத்தது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், அமித் ஷா மீது பிஜ்னோர் மாவட்ட நிர்வாகம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 153 (கலவரத்துக்கு மக்களை தூண்டுதல்), மக்கள் பிரதிநிதித்து வச் சட்டப் பிரிவு 125 (வெவ்வேறு சமூகத்தினரிடையே மோதலை ஊக்குவித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.