

தேர்தல் முடியும் வரை, ராணுவ தலைமை தளபதி நியமனம் போன்ற முடிவுகளை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாஜக வலியுறுத்தியுள்ளது.
ராணுவத் தலைமை தளபதி விக்ரம் சிங் ஜூலை 31-ம் தேதி ஓய்வுபெறுகிறார். இந்நிலையில் துணைத் தளபதியான தல்பீர் சிங் சுஹாக்கை அடுத்த தலைமை தளபதியாக நியமிக்கும் நடை முறைகளை பாதுகாப்பு அமைச்ச கம் தொடங்கியுள்ளது. மேலும் லோக்பால் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான நடை முறை களையும் மத்திய அரசு தொடங்கி யுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “நாட்டில் தேர்தல் நடந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. குறைந்தபட்சம் மே 16-ம் தேதி வரையிலாவது இதுபோன்ற நியமனங்களை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்” என்றார்.
முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் கூறுகையில், “தற்போதைய தளபதி ஓய்வு பெறுவதற்கு இன்னும் நாள்கள் உள்ளன. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற நியமனங்களில் மத்திய அரசு அவசரம் காட்டக்கூடாது” என்றார். அடுத்த தளபதியாக சுஹாக் நியமிக்கப்படுவதை எதிர்க்கிறீர் களா என்று கேட்டதற்கு, “தனிப் பட்ட நபர்கள் பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை” என்றார் வி.கே.சிங்.
இந்தநிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சசி தரூர் கூறுகையில், “ஆயுதப் படைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை யாக இருந்து வருகின்றன. இது துறை சார்ந்த முடிவு. இதில் பாஜக தலையிடுவதற்கு எதுவும் இல்லை. எனக்குத் தெரிந்தவரை இதுபோன்ற முடிவுகளுக்கு முன் எதிர்க்கட்சியிடம் ஆலோசிக்க வேண்டும் என்ற நடைமுறை இருப்பதாகத் தெரியவில்லை” என்றார்.