

வி
வசாயிகளை நாட்டின் முதுகெலும்பு என்கிறார்கள். ஆனால், இயற்கையும் அரசியலும் கூட்டுச் சேர்ந்து கொண்டு விவசாயிகளை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், மதுரைப் பக்கமிருந்து இப்படியொரு ஆறுதலான செய்தி!
ஆம், உழவர் சந்தைக்கு காய்கனி விற்க வரும் விவசாயிகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இலவச முழு உடல் பரிசோதனை செய்து விவசாயிகளின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுக்கிறது மதுரை சொக்கிகுளம் உழவர் சந்தை நிர்வாகம். கடந்த செப்டம்பரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது இரண்டு கட்டங்களைக் கடந்து மூன்றாவது கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தத் திட்டம் குறித்து நம்மிடம் பேசிய உழவர் சந்தை தொடர்பான அதிகாரிகள், “பயிரில் பூச்சி விழுந்தால் துடிக்கும் விவசாயிகள், தங்களுடைய உடம்பைப் பற்றி அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை. ஏதாவது பெரிய பாதிப்பாக வரும்போது மட்டும்தான் இவர்கள் ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறார்கள். அதிகாலை 4 மணிக்கு சந்தைக்குக் கிளம்பி வந்து காய்கனிகளை விற்றுவிட்டு மதியம் வீடு திரும்பும் இவர்கள், மாலையில் மீண்டும் தோட்டங்களுக்குப் போய்விடுகிறார்கள். இதனால், தங்களுக்கு வரும் நோய்களை வரும்முன் காத்துக் கொள்ளவோ, வந்ததும் ஆரம்ப நிலையிலேயே அதை அறிந்து கொண்டு சிகிச்சை எடுக்கவோ இவர்களுக்கு அவகாசம் இருப்பதில்லை.
இதனால் பலபேர், தாங்கள் ஆபத்தான நோய்களுக்கு ஆளாகியிருக்கிறோம் என்பதைக்கூட அறியாமல் இருந்து, திடீரென ஒருநாள் மரணத்தைச் சந்திக்கிறார்கள். இத்தகைய திடீர் நிகழ்வுகளால், அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இங்கு வரும் உழவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அப்படியொரு அசாதாரண சூழல் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த இலவச உடல் பரிசோதனைத் திட்டத்தை இங்கு அறிமுகப்படுத்தினோம்” என்றார்கள்.
‘உழவர் நலனில் உழவர்சந்தை’ என்ற இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 40 பேருக்கு காசநோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளன.
“இந்த யோசனை உங்களுக்கு எப்படி உதித்தது?” சொக்கிகுளம் உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் த.குணசேகரனிடம் கேட்டோம். “2016-ல் நான் இந்த உழவர் சந்தைக்கு நிர்வாக அலுவலராக பொறுப்பேற்ற புதிது. ஒரு நாள் காலை 8.30 மணியளவில் வழக்கம்போல் உழவர் சந்தை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு கடையில் காய்கனி விற்றுக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் மயங்கி விழுந்தார். நாங்கள் பதறியடித்துக் கொண்டு அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். ஆனால், வழியிலேயே அவர் இறந்து விட்டார். கண்முன்னே பார்த்த இந்த சம்பவம் என் மனதை ரொம்பவே பாதித்தது.
விசாரித்ததில், ரொம்ப நாளாகவே அந்த விவசாயி உடம்புக்குச் சுகமில்லாமல் இருந்தும் சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமல் சந்தைக்கு காய்கனி விற்க வந்தது தெரியவந்தது. அப்போது உதித்ததுதான் இந்த இலவச மருத்துவ முகாம் திட்டம். விவசாயிகள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் விவசாயம் ஆரோக்கியமாக இருக்காது. ஆரோக்கியமான காய்கனிகள் கிடைக்காவிட்டால் பொதுமக்கள் ஆரோக்கியமாக இருக்க முடியாது. எனவே, ஆரோக்கியத்தின் அடிப்படை ஆதாரமான விவசாயிகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ‘உழவர் நலனில் உழவர்சந்தை’ என்ற திட்டத்தை தாமதிக்காமல் தொடங்கினோம். இப்போது அதன் பலனை இங்கு வரும் அனைத்து விவசாயிகளும் பெற்றுவருகிறார்கள்” என்றார்.
உழவர் சந்தைத் திட்டத்தை தேசிய அளவில் கொண்டு செல்ல மத்திய அரசு பரிசீலிப்பதாக ஒரு தகவல் உண்டு. அதுபோல உழவர் நலன் காக்கும் இந்தத் திட்டத்தையும் தேசிய அளவில் அனைத்து உழவர்களுக்குமான திட்டமாக செயல்படுத்த யாராவது குரல் கொடுக்கலாமே!
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி