

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக சென்னை மாறும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.வி.ரமணியை ஆதரித்து, மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சைதாப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சிக்கு இனி வசந்த காலம். கூட்டணி கட்சிக்காக கையேந்திய காலம் போய், நமது கட்சிக்காக வாக்கு கேட்கிறோம். காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை யாருடனும் பங்கு போடாமல், நம்முடைய சாதனையை நாமே சொல்லி வாக்கு கேட்கிறோம்.
தமிழகத்தை 47 ஆண்டுகள் திமுகவும் அதிமுகவும் ஆட்சி செய்துள்ளன. இத்தனை ஆண்டு களில் சென்னை மாநகராட்சி சாதித்தது என்ன? சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு, மின்வெட்டு, வேலையின்மை பிரச்சினை தீர வில்லை. மக்களுக்காக எதுவும் செய்யாத திமுகவிற் கும் அதிமுகவிற்கும் வாக்களிக் காதீர்கள். சென்னையை அதிமுகவின் கோட்டை என்று சொல்கிறார்கள். வரும் காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக சென்னை மாறும்.
தமிழகத்தில் 20 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய் துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொற்கால ஆட்சியில் கல்வி, விவசாயம் மற்றும் தொழில் புரட்சி ஏற்பட்டது. இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. மின்திட்டங்கள் கொண்டு வரப் பட்டது. இன்று தமிழகத்தில் ஓரளவு மின்சாரம் இருக்கிறது என்றால், அதற்கு காமராஜர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மின் திட்டங்களே காரணம்.
திமுக, அதிமுகவின் 47 ஆண்டுக்கால ஆட்சியில் மின்சாரம், குடிநீர் பிரச்சினை தீரவில்லை. மதுக்கடைகளை திறந்ததுதான், அவர்களின் சாதனையாகும். தமிழகத்தின் பெரும்பாலான வளர்ச்சி திட்டங்களில் மத்திய அரசின் பங்கு இருக்கிறது. அடையாறு ஆறு, மாம்பலம் கால்வாய், நந்தனம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரும் திட்டத்திற்காக ரூ.1,448 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இவற்றில் ரூ.300 கோடி மானியமாகும். மெட்ரோ ரயில் பணிக்காக ரூ.7 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 100 நாள் வேலைத் திட்டத்தால் 5 கோடி ஏழை-எளிய குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
தீ பிடிக்காத கான்கிரீட் வீடுகள் திட்டத்தில், 50 சதவீதம் நிதி மத்திய அரசை சேர்ந்தது. ஆனால், அதனை அதிமுக செய்ததாக சொல்கின்றது. மத்திய அரசின் திட்டங்களை தன்னுடைய திட்டங்களாக அதிமுக சொல்கிறது. மத்திய அரசின் திட்டங்களை மறைக்க நினைப்பவர்களை மன்னிக்கக்கூடாது. அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.