விறுவிறுப்பான 3-ம் கட்ட தேர்தல்: 91 தொகுதிகளிலும் கடந்த முறையைவிட அதிக வாக்குப்பதிவு

விறுவிறுப்பான 3-ம் கட்ட தேர்தல்: 91 தொகுதிகளிலும் கடந்த முறையைவிட அதிக வாக்குப்பதிவு
Updated on
2 min read

மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு 91 தொகுதிகளில் வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. 91 தொகுதிகளிலும் கடந்த முறையைவிட அதிக வாக்குகள் பதிவாகின.

கேரளம்- 20, அந்தமான்& நிகோபார்- 1, லட்சத்தீவு- 1, டெல்லி- 7, ஹரியாணா- 10, உத்தரப் பிரதேசம்- 10, ஒடிசா -10, மகாராஷ்டிரம் -10, பிஹார் -6, சண்டிகர் -1, சத்தீஸ்கர் -1, ஜம்மு-காஷ்மீர் 1, மத்தியப் பிரதேசம் -9, ஜார்க்கண்ட் -4 ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 91 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இவை தவிர ஒடிசாவின் 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் மகாராஷ்டிரத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.

பிஹாரில் தாக்குதல்

பிஹார் மாநிலத்தில் 6 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் ஜமுய் தொகுதிக்கு உள்பட்ட தாராப்பூர் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 7 வீரர்கள் பலத்த காயமடைந்தனர். மற்ற இடங்களில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. இங்கு மாலை நிலவரப்படி 52 சதவீத வாக்குகளே பதிவாகின.

கேரளத்தில் 73.4%

கேரளத்தின் 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதலே வாக் காளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்குரிமையைச் செலுத்தினர். . மாலை 6 மணி நிலவரப்படி 73.4 சதவீத வாக்குகள் பதிவாகின.

டெல்லியில் 64%

தலைநகர் டெல்லியின் 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்பட பல்வேறு பிரபலங்கள் டெல்லியில் வாக்களித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி 64 சதவீத வாக்குகள் பதிவாகின.

சண்டிகரில் 74%

ஹரியாணா மாநிலத்தின் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு 73% சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக யூனியன் பிரதேசமான சண்டிகர் தொகுதியில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின.

உத்தரப் பிரதேசத்தில் 66%

உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் வகுப்பு கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர் தொகுதியில் 67.78 சதவீத வாக்குகளும் உத்தரப் பிரதேசம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 66.29 சதவீத வாக்குகளும் பதிவாகின.

மகாராஷ்டிரத்தில் 56%

மகாராஷ்டிர மாநிலத்தில் 10 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 56 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.

ஹெலிகாப்டர் கண்காணிப்பு

ஜார்க்கண்டின் 4 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 6 ஹெலிகாப்டர்கள் மூலம் வனப்பகுதிகள் கண்காணிக்கப்பட்டன. இங்கு 60 சதவீத வாக்குகள் பதிவாகின.

காஷ்மீரில் 68%

ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 6 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஜம்மு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 68 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஒடிசாவில் சட்டமன்ற தேர்தல்

ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் துக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் 10 மக்களவைத் தொகுதிகள் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 67 சதவீத வாக்குகள் பதிவாகின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in