

எல்.ஆதிமூலம் - விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்.
சிவகங்கைத் தொகுதிக்கு எத்தனையோ கோரிக்கைகள் இருந்தாலும், முக்கியமானது வேலைவாய்ப்புதான். ஜெர்மனிக்கு அடுத்தபடியாக உலகத்தரம் வாய்ந்த கிராஃபைட் தாது, கோமாளிபட்டி தொடங்கி பூவந்தி வரை 16 கிலோ மீட்டர் சுற்றளவில் 5 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்குப் புதைந்துள்ளது. கிராஃபைட் 3,000 டிகிரிக்கும் அதிகமான வெப்பத்தைக்கூடத் தாங்கும். பெயிண்ட், பென்சில், மசகு எண்ணெய், அணு உலையின் உட்பகுதி, உலோக உருக்கு ஆலைகள், விமான உதிரிப் பாகங்கள் தயாரிப்பு போன்ற பல்வேறு தொழில்களுக்கு இது தேவைப்படுகிறது.
கடந்த 1971-ல் தமிழக அரசு இதற்காக ஆணையத்தை ஏற்படுத்தி, 900 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது.ஒருமுறை முன்னாள் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, ‘இங்கே கிராஃபைட் வெட்டி எடுப்பது, சுத்திகரிப்பது, பொருளை உற்பத்திசெய்வது போன்ற திட்டங்கள் இருக்கிறது’ என்று தமிழக அரசு சொன்ன பதில் சட்டசபையில் பதிவாகி உள்ளது. கிராஃபைட்டை வெட்டியெடுத்து, ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைக்கு 1988-ல் ப.சிதம்பரம் அடிக்கல் நாட்டினார். ஆனால், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தர வேண்டிய இந்தத் திட்டம், சிறுதொழில்போல் முடங்கிக்கிடக்கிறது. இந்தத் திட்டம் மட்டும் நிறைவேறிவிட்டால், சிவகங்கையில் ஒரு துணை நகரம் உருவாகும். ஏராளமான துணை தொழிற்சாலைகளும் உருவாகி வேலைவாய்ப்பு கிடைக்கும்.