

# சிதம்பரம் ரயில் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. இங்குள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். எனவே, ரயில் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த வேண்டும். கூடுதல் எண்ணிக்கையில் ரயில்கள் விட வேண்டும். எக்ஸ்பிரஸ் ரயில்களை இங்கு நிறுத்திச் சென்றால் சிதம்பரம், புவனகிரி, சீர்காழி பகுதி மக்கள் பலன் பெறுவார்கள்.
# சிதம்பரம் மிகவும் தாழ்வான பகுதி. அதனால், மழைக் காலங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகம். இதை உணர்ந்த பண்டைய மன்னர்கள் இங்கு சுரங்க நீர்வழிப் பாதைகளை அமைத்திருந்தனர். அவை தூர்ந்து அழிந்துவிட்டன. அதனால், இப்போது இருக்கும் வடிகால் வாய்க்கால்களையாவது ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டால் வெள்ள பாதிப்புகள் குறையும்.
# சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது. ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குட்டியாண்டவர் கோயில் பகுதியில் உள்ள கிணறுகளில் நீர் இறைத்து, சைக்கிள்களில் சுமந்துவந்து குடம் ரூ.10 முதல் 20 வரை விற்பனை செய்கின்றனர். இதை இங்கு பலரும் தொழிலாகவே செய்துவருகின்றனர்.
# தொகுதி முழுவதுமே கழிவுநீர் மற்றும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் கொசுத் தொல்லையும் நோய்களும் அதிகம். இது தொடர்பாக மக்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். தொகுதியில் பொதுக் கழிப்பிடக் கட்டுமானங்கள் குறைவு. கணிசமான மக்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே பயன்படுத்துகின்றனர். பட்டியலினத்தவர் சமூகத்தினர் வசிக்கும் கிராமங் களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
# அரியலூர், மாவட்டத் தலைநகரானபோதும் தலைநகருக்குரிய அடிப்படை வசதிகள் இல்லை. பாதாள சாக்கடைத் திட்டம் அறிவிப்போடு நிற்கிறது.
# அரியலூரின் சிமெண்ட் நிறுவனங்களில், மிகக் குறைந்த கூலியில் வெளி மாநிலப் பணியாளர்களையே நியமிக்கின்றனர். ஆனால், சிமெண்ட் ஆலைகளின் மாசுக்களால் பாதிக்கப்படுவது மட்டும் உள்ளூர் மக்கள். எனவே, நியாயமான கூலியில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.
# தொகுதியில் விவசாயத்தைத் தவிர, வருவாய்க்கு வேறு வழியில்லை. நெசவுத் தொழிலும் நசிந்துவருகிறது. ஒருகாலத்தில் தீவிரவாத இயக்கங்கள் சில இங்கு காலூன்றி இருந்தன. இப்போது அந்த இயக்கங்கள் இல்லை என்றாலும் அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் அவற்றின் தாக்கம் இருக்கிறது. எனவே, இளைஞர்கள் பாதை மாறிப் போகாமல் இருக்க இந்தப் பகுதியில் தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும்.
# நடராஜர் கோயில், வைத்தீஸ்வரன் கோயில், முஷ்ணம் பூவராகன் ஆகிய கோயில்களுக்கும் பிச்சாவரத்துக்கும் தினசரி ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவர்கள் தங்குவதற்குத் தரமான வசதிகள் இல்லை. சிதம்பரத்தை சுற்றுலாத் தலமாக அறிவித்து, போதுமான பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
# நாகை மாவட்டத்தை இணைக்கும் விதமாகக் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. எனவே, நாகை மாவட்டத்துக்கான போக்குவரத்து வழித்தடங்களை சிதம்பரம் வழியாக செயல்படுத்தினால் சிதம்பரம் நகரம் தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும்.
#அரியலூரையும் தஞ்சாவூரையும் இணைக்கும் அணைக்கரை பாலம் பழுதடைந்துவிட்டது. இதனால், சென்னை - கும்போணம் இடையே சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, மாற்றுப் பாலம் தேவை.