

தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப் பட்டுள்ளதால், வடமாவட்ட மதுபானப் பிரியர்கள் ஆந்திரா வுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் ஆந்திரா வில் மது விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.
மக்களவைத் தேர்தலை யொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மதுபானப் பிரியர்களின் கவனம் ஆந்திரா பக்கம் திரும்பியுள்ளது.
இவர்கள் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தூர், குடிபாலா, சத்தியவேடு, எஸ். ஆர். புரம் , நகிரி, புத்தூர், பலமனேர், வி. கோட்டா, குப்பம் பலமனேர் ஆகிய ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். பஸ்கள் மட்டுமன்றி கார், பைக் மூலமாகவும் இவர்கள் வருகின்றனர். பலர் கையோடு பார்சலும் கொண்டு செல்கின்றனர்.
இதனால் கடந்த 2 நாள்களாக ஆந்திர எல்லைகளில் உள்ள மது பானக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.மேலும் இங்கு ‘கள்’ விற்பனையும் விறுவிறுப்பாக உள்ளது.
இந்நிலையில் வேட்பாளர்களின் சீக்ரெட் ஏஜென்ட்டுகள் மூலம், ஆந்திராவில் இருந்து தமிழகத் திற்கு மதுபான பாட்டில்கள் பஸ்கள் மூலம் கொண்டுசெல்லப்படுவதாக வந்த தகவலின் பேரில் ஆந்திர - தமிழக எல்லைகளில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.