

சென்னையில் பிரச்சாரத்தின்போது வெளியிட்ட கருத்துகளால், பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, தமிழக மக்களின் வருத்தத்தை சம்பாதித்ததாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
சென்னையில் அவர் இன்று அளித்த பேட்டி:
ரஜினியை நேற்று மோடி சந்தித்தார். அவரை நல்ல நிர்வாகி என்று ரஜினி சொல்லியிருப்பது பற்றி?
ரஜினி பேசியதைப் பற்றியோ, அவர் சொன்னதைப் பற்றியோ 'நோ கமெண்ட்ஸ்'. நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்திருக்கிறீர்கள். அதுபற்றி உங்கள் கருத்து?
நான் மகிழ்ச்சி அடையத்தக்க அளவிற்கு இருந்தது.
அதிமுக தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் உங்களை சாடிக் கொண்டிருக்கிறார்களே?
அவர்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தோல்வி பயம் அதிகமாகிவிட்டது. ஆகவே எங்களை சாடுகிறார்கள்.
முதன்முதலாக நேற்று தமிழகத்தில் பேசிய மோடி, திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே மக்களைப் பற்றி அக்கறை இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?
தமிழ்நாட்டில் முதன்முதலாக பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். அப்போது ஒரு அருமையான வாசகத்தை முதன்முதலாக வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் வருத்தத்தை சம்பாதிக்க வேறு காரணமே தேவை இல்லை.