மோடிக்கு எதிரான பேச்சு: பாக். அமைச்சருக்கு பாஜக கண்டிப்பு

மோடிக்கு எதிரான பேச்சு: பாக். அமைச்சருக்கு பாஜக கண்டிப்பு
Updated on
1 min read

தனது கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கு, பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மோடி பிரதமரானால் இந்தியாவின் அமைதி சீர்குலைந்துவிடும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், பாஜக செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேக்கி கூறுகையில், "பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்போவதாக பேசவில்லை. அவர், தாவூத் இப்ராஹிமை கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தியாவின் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவிடம்தான் கேள்வி எழுப்பினார். அவர் பேசியது நாட்டின் உள்விவகாரம், இதில் பாகிஸ்தானின் தலையீடு தேவையற்றது.

பாகிஸ்தான் தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும். அந்த நாடு, இந்தியாவுடன் கொண்டுள்ள அணுகுமுறை இனிமேலும் எடுபடாது. பாகிஸ்தானின் தேர்தல், உள்துறை விவகாரம் போன்றவற்றில் இந்தியா தலையிட்டதில்லை. அதனையே நாங்கள் அந்த நாட்டிடமிருந்தும் எதிர்ப்பார்க்கிறோம்.

ஆனால், பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் பேச்சின் மூலம், தாவூத் ஒருவேளை பாகிஸ்தானில்தான் இருக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. ஒருவர் உள்துறை விவகாரம் குறித்து பேசும்போது, அது எந்த வகையில் பாகிஸ்தானை பாதிக்கும் என்று தெரியவில்லை" என்றார்.

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசும்போது, "உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, தாவூத் இப்ராஹிமுக்கு எதிராக நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல், ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். நான் பிரதமரானால் பாகிஸ்தானில் இருந்து தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டு வருவேன்" என்று கூறியது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in