

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையெ ாட்டி நடத்தப்பட்ட சோதனைகளின்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.76 கோடி பணம் மற்றும் பொருட்கள் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டன.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாக்காளர்களுக்கு லஞ்சம் தருவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக பல பறக்கும் படைகளும் கண் காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டன.
இந்தக் குழுக்கள் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனைகளின்போது உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் 25 கோடியே 5 லட்சத்து 89 ஆயிரத்து 211 ரூபாய் கைப்பற்றப்பட்டன.
மேலும் ரூ. 51 கோடியே 83 லட்சத்து 54 ஆயிரத்து 626 மதிப்புள்ள நகை உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ரூ.76 கோடியே 89 லட்சத்து 43 ஆயிரத்து 837 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணமும் மற்ற பொருட்களும் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுவிட்டன.