

கோவிந்தசாமி - தி.மு.க. தொ.மு.ச. மாநிலத் துணைத் தலைவர்:
திருப்பூர் மாவட்டம் பயன்பெறும் அவிநாசி- அத்திக்கடவு திட்டத்தை சட்டசபைத் தேர்தலின்போது நிறைவேற்றித் தருவதாக முதல்வர் சொன்னார். இதுவரை செய்யவில்லை. திருப்பூர் நகராட்சியாக இருந்தபோது இருந்த குறைந்த எண்ணிக்கையிலான துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டே மாநகராட்சி ஆன பின்பும் வேலை செய்கிறார்கள். இதனால், பொதுச் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் மூலம், மாநில அரசு திட்ட மதிப்பீடு செய்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மூன்றாண்டுகள் ஆகியும் திருப்பூர் மாநகராட்சி அதைச் செய்யவில்லை.
காமராஜ் - மாவட்டச் செயலாளர், சி.பி.எம்.
சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்குவதைப் போல், தொழில் நகரமான திருப்பூருக்கும் வழங்க வேண்டும். இல்லையெனில், ஜெனரேட்டருக்கான டீசலுக்கு மானியம் வழங்க வேண்டும். தொழிலாளர்கள் நிரந்தரமாகத் தங்க, நகரில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் தேவை. லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வசிக்கும் திருப்பூரில் படுக்கை வசதிகளுடன்கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை இல்லை. நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.