

பொன்னுத்தாய் - மாநிலக் குழு உறுப்பினர், சி.பி.எம்:
ஏழை மக்கள் அதிகம் வசிக்கிற தொகுதி மதுரை. மோகன் எம்.பி-யாக இருந்தபோது, தொகுதி மேம்பாட்டு நிதியின் பெரும்பகுதியை, மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொடுத்தார். ஆனால், 19 கோடி ரூபாயைத் தொகுதி வளர்ச்சி நிதியாகப் பெற்றுள்ள மு.க.அழகிரி, ஒரு பைசாகூட அரசு மருத்துவமனைக்குத் தரவில்லை. ஒரே ஒரு தொழிற்சாலையைக் கொண்டுவந்திருந்தால்கூட மதுரையில் ஓரளவு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். அதையும் அவர் செய்யவில்லை.
ஜான் மோசஸ் - மாநிலப் பொதுச் செயலாளர், மதச் சார்பற்ற ஜனதா தளம்.
எத்தனையோ ஆட்சிகள் வந்துபோனாலும், மதுரை இன்றளவும் நகரப் பட்டிக்காடாகத்தான் இருக்கிறது. நெல்லை, திருச்சி போன்ற நகரங் களில் உள்ள அடிப்படை வசதிகள்கூட மதுரையில் இல்லை. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே மேம்பாலம் கட்டுவதாக நான் சிறுவனாக இருக்கும்போதிருந்தே சொல்லிக்கொண்டி ருக்கிறார்கள். காளவாசலில் மேம்பாலம் கட்டுவதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க-வும், அதே உறுதிமொழியுடன் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க-வும் மக்களை ஏமாற்றிவிட்டது.