

ஆர். ராஜா சிதம்பரம் - மாநிலச் செயலாளர், தமிழக விவசாயிகள் சங்கம்:
பெரம்பலூர் விவசாய பூமி. லால்குடி, முசிறி, குளித்தலை, மணச்சநல்லூரின் ஒரு பகுதி போன்றவை டெல்டாவின் பகுதிகளே. இங்கு விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. மாறாக, இடைத் தரகர்கள் கொழுப்பதற்கே அரசுகள் வாய்ப்பளிக்கின்றன. அரிசி, சர்க்கரை விலை ஏறிக்கொண்டே போகிறது. ஆனால், நெல்லுக்கும் கரும்புக்கும் கொள்முதல் விலை மட்டும் தேங்கி நிற்கிறது. குளிரூட்டப்பட்ட அறையில் கணிப்பொறி முன் அமர்ந்து, வெயிலில் காயும் விவசாயிகளின் உழைப்புக்கான அடிமாட்டு விலையை முதலாளிகள் நிர்ணயிப்பதுதான் அதற்குக் காரணம். மத்திய வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் தன்னாட்சி பெற்றால் மட்டுமே விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கும். அதற்கான நடவடிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்க வேண்டும்.
முசிறி, லால்குடி பகுதிகளில் இயற்கைச் சீற்றங்களால் வாழைப் பயிர் அதிக அளவு இழப்பாகிறது. அரசின் குளறுபடி நடைமுறைகளால் காப்பீடு கிடைப்பதில்லை. தனி விவசாய நிலம் பாதிக்கப்பட்டாலும் காப்பீடு கிடைக்க வழி செய்ய வேண்டும். பெரம்பலூரில் சுமார் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டும் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் முடங்கிக்கிடக்கிறது. ஒன்று, திட்டத்தைச் செயல்படுத்துங்கள்; இல்லை, நிலத்தை விவசாயிகளுக்குப் பிரித்துக்கொடுங்கள்.
இங்கு நான்காவது ஆண்டாக வறட்சி தொடர்கிறது. அதனை எதிர்கொள்ள நவீன வேளாண் உத்திகள் வகுக்கப்பட வேண்டும். இல்லையெனில், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு கூலி வேலைகளுக்குச் செல்லும் நிலையாகிவிடும்.