

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியில் இணையதள வசதி இல்லாத பதற்றமான 24 வாக்குச் சாவடிகளில் நுண்தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச் சாவடிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள நுண் தேர்தல் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆட்சியர் விளக்கினார்.
தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் ஜெகதீஷ் சந்தர் சர்மா, செலவினப் பார்வையாளர்கள் கோபிநாத், பிரசாத் ராவ் ஆகியோரும் பங்கேற்றனர். நுண் பார்வையாளர் நியமனம் குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3452 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 271 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாக்குச் சாவடிகளில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த வாக்குச்சாவடியில் நடைபெறும் வாக்குப் பதிவினை வெப் காஸ்டிங் முறையில் பதிவு செய்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 160 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் 24 வாக்குச் சாவடிகளில் வெப் காஸ்டிங் முறையில் பதிவு செய்ய இணையதள வசதி இல்லை. அதனால் இந்த வாக்குச் சாவடிகளுக்கு நுண் தேர்தல் பார்வையாளர்களை ஆட்சியர் பாஸ்கரன் நியமித்துள்ளார். இவர்கள் மத்திய அரசு பணியாளர்கள் ஆவர் என்றனர்.