

மகாராஷ்டிரத்தில் விவசாயிகளுக்கு அநீதி இழைத்து அவர்களின் தற்கொலைக்கு காரணமானவர்களை கொலை செய்யுங்கள் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்தார்.
விதர்பா பகுதியில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சி சார்பில் ராஜு பாட்டீல் ராஜே போட்டி யிடுகிறார். அவருக்கு ஆதரவாக யவத்மால் பகுதியில் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பேசியதாவது:
சாலை, எரிசக்தி, தண்ணீர், வேலைவாய்ப்பு ஆகிய முக்கிய அம்சங்களை முன்வைத்தே கடந்த 67 ஆண்டுகளாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆனால் இன்றுவரை அவை நிறைவேறாத கனவுகளாகவே உள்ளன.
அப்படியிருக்கும்போது எதற்காத தேர்தல் நடத்த வேண்டும். கிராமப்புறங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது, ஆனால் கள்ளச் சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விதர்பா பகுதியில் வறட்சி, கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இனி்மேல் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வு அல்ல.
அதையும் மீறி நீங்கள் சாக விரும்பினால் உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய, உங்களுக்கு அநீதி இழைத்தவர்களை முதலில் கொலை செய்யுங்கள் என்றார்.
மகாராஷ்டிரத்தில் காங் கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியாளர்களை மறைமுகமாகத் தாக்கி ராஜ் தாக்கரே பேசியது மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.