

சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டு, புதிய போலீஸ் கமிஷனராக திரிபாதியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த திரிபாதி, சென்னை மாநகரின் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2011 மே முதல் 2012 செப்டம்பர் வரை சென்னை மாநகரக கமிஷனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை போலீஸ் கமிஷனராக இதுவரை இருந்த ஜார்ஜ், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக சந்தோஷை நியமித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் இம்மாதம் 24-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து தமிழக காவல்துறை முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலை பாகுபாடு இல்லாமல் நடத்துவதற்காக ஐஏஎஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
காவல் துறை தலைமை இயக்குநராக அனுப் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டார். தேர்தல் தொடர்பான பணிகள் அனைத்தும் இவரது தலைமையிலேயே நடக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மற்ற பணிகளுக்கு ராமானுஜமே காவல் துறை தலைமை இயக்குநராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.