

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அனைவரையும் சமமாக மதிப்பவர், பரந்த மனப் பான்மையுடன் செயல்படுபவர் என்று அவரின் சகோதரி பிரியங்கா வதேரா கூறியுள்ளார்.
ராகுல் காந்தி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி நாடாளுமன்றத் தொகுதி யில் பிரியங்கா வதேரா புதன் கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடு பட்டார். அப்போது, அவர் பேசிய தாவது: “ராகுலின் அரசியல் ஒளிவு மறைவின்றி தெளிவாக இருக்கும். பரந்த மனப்பான்மையுடன் செயல் படுவார். அவர் அனைவரையும் சம மாகத்தான் நடத்துவார். அனை வரும் பயன்பெற வேண்டும்; ஒற்று மையாக இருக்க வேண்டும் என நினைப்பார். அவர் தொலை நோக்குச் சிந்தனையுள்ளவர். மக்களை பலப்படுத்தும் அரசியலில் அவருக்கு நம்பிக்கையுள்ளது.
இந்த தொகுதியில் எனது தந்தை ராஜீவ் காந்தி காலம் தொட்டு, இப் போதுவரை பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. மற்றவர்களைப் போல தேர்தலின்போது மட்டும் தொகுதி பக்கம் எட்டிப்பார்ப்பவர்கள் அல்ல நாங்கள்.
இந்த தொகுதியின் வேட்பாளர் கள் பலர், ராகுல் காந்தியை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே இங்கு போட்டியிட வந்துள்ளனர். உங்களின் (அமேதி தொகுதி மக்கள்) மேல் உள்ள அன்பின் காரணமாகவோ, அக்கறையின் காரணமாகவோ அவர்கள் இங்கு போட்டியிடவில்லை.
இதுவரை நாங்கள் எந்தவித மான வளர்ச்சிப் பணிகளையும் செய்திராவிட்டால், எங்களின் குடும்பத்தினரை நீங்கள் வெற்றி பெற வைத்திருக்கமாட்டீர்கள். எனவே, இந்த முறையும் ராகுலை வெற்றிபெறச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ராகுல் இந்த தொகுதியில் மேற்கொண்டுள்ள பணிகளுக்கான பலன்கள் இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகளில் உங்களுக்குத் தெரியவரும்.
எனினும், மின் பற்றாக்குறை உள்ளிட்ட இன்னும் சில தீர்க்கப் படாத பிரச்சினைகள் இத்தொகுதி யில் உள்ளன. இதற்கு மாநில அரசே காரணமாகும்.