

நரேந்திர மோடி சிறந்த பிரதமர் வேட்பாளர் அல்ல என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்திய சென் தெரிவித்தார்.
மேற்குவங்க மாநிலம், போல்பூர் மக்களவைத் தொகுதியில் புதன் கிழமை வாக்களித்த அமர்த்திய சென் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: “மோடி தொடர்பான எனது நிலைப்பாடு அனைவரும் அறிந்தது தான். அவர் மிகச் சிறந்த பிரதமர் வேட்பாளர் அல்ல என்பதே எனது கருத்து. சமூகத்தினர் சில பிரிவினரிடையே அவர் பிரபலமான வராக இருக்கிறார். குறிப்பாக, தொழிலதிபர்கள், வியாபாரிக ளிடையே மிகுந்த செல்வாக்கு மிக்கவராக மோடி உள்ளார். அத னாலேயே அவரை எனக்கு விருப்ப மான வேட்பாளராக கருதக்கூடாது.
மதச்சார்பற்றத்தன்மையில் நம்பிக்கையுள்ள ஒருவர் பிரதமராக வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்நாட்டின் தலைவராக விரும்புபவர், சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது” என்றார்.
முன்னதாக கடந்த செவ்வாய்க் கிழமை ‘தி இந்து’ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்ததாவது: “ராமர் கோவில் போன்ற விவகாரங்களை, தங்களின் முக்கிய செயல்திட்டத்திலிருந்து விலக்கி வைப்பதுதான் பாஜகவிற்கு நல்லது. இந்து முஸ்லிம் வேற்றுமை சிந்தனை மிக்க ஆர்.எஸ்.எஸ். முகாமிலிருந்து வந்தவ ரால் (மோடி) இதை செய்ய முடியுமா? மதவாத அடையாள மின்றி இருப்பது பாஜகவுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது அனைவரையும் அரவணைத்துச் செல்பவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், மோடிக்கு கூடுதலாக சில வாக்குகள் வேண்டு மானால் கிடைக்கலாம். தேர்தலுக் காக இதுபோன்று நடந்து கொள் வதற்கும், நாட்டை ஆளும்போது அதை (அரவணைத்துச் செல்வதை) செயல்படுத்துவதற்கும் இடையே மிகுந்த வித்தியாசம் உள்ளது. மோடி பிரதமராக வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை.
மோடி பிரதமரானால், நாட்டை விட்டு வெளியேறுவோம் என்று அவரை விரும்பாத சிலர் கூறுகின்ற னர். இது தவறான அணுகுமுறை. அரசை நடத்துவோர் மீதான அதிருப்தியில் நாட்டை மாற்றக் கூடாது, அரசை மாற்றுவதற்குத் தான் முயற்சிக்க வேண்டும்.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்தான் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசின் சாதனை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி யது சரியல்ல. அதைவிட அரசின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுவது, போலியா ஒழிப்பும், எய்ட்ஸை மேலும் பரவாமல் கட்டுப் பாட்டுக்குள் வைத்ததும்தான்.
சுகாதாரம், கல்வி, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங் களில் காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல்பாடு சரியான திசையில் இருக்கிறது.
மானியங்களை குறைப்பதற்கு முன்பாக, அந்த தொகை யாருக்குச் செல்கிறது என்பதை ஆட்சியில் இருப்போர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்தை மட்டும்தான் உணவுப் பாதுகாப் பிற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அரசு செல விடுகிறது. அதைவிட இருமடங்கு தொகையை மின்சாரம், சமையல் எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள், உரம், 5 நட்சத்திர ஓட்டல்களின் ஏர் கண்டிஷன்களுக்கு மானியமாக அளிக்கப்படுகிறது. ஏழைகளுக்கு மானியம் தரும்போதுதான், நிதி நெருக்கடி பற்றி பரவலாக பேசப்படுகிறது. பணக்காரர்க ளுக்கு தரும்போது, அதைப் பற்றி யாருமே பேசுவதில்லை” என்றார் அமர்த்திய சென்.