

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் திமுக வேட்பாளர் ஜி.செல்வத்தை ஆதரித்து 10 இடங்களில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் செய்தார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தனித்தொகுதியில் திமுக வேட்பாளராக ஜி.செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில், நட்சத்திர பேச்சாளரும் கட்சியின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின் செவ்வாய்க் கிழமை 10 இடங்களில் தலா 15 நிமிடங்கள் பிரச்சாரம் செய்ய கட்சி சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி அளவில், கேளம்பாக்கத்திற்கு வாகனத்தில் வந்த ஸ்டாலின், வாகனத்தில் இருந்தபடியே சுமார் 15 நிமிடங்கள் பேசி பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, திருப்போரூர், மாமல்லபுரம், புதுப்பட்டினம், திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு, பழையசீவரம், வாலாஜாபாத், அய்யம்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 10 இடங்களில் வாகனத்தில் இருந்தபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வழி நெடுகிலும் தொண்டர்கள் வெடி களை வெடித்து, ஸ்டாலினை வரவேற்றனர். திருக்கழுகுன்றம் பகுதியில் 500 மோட்டார் சைக்கிள் கள் முன்னே செல்ல, ஸ்டாலினை தொண்டர்கள் அழைத்து வந்தனர். ஒவ்வொரு இடத்திலும் ஏராளமான தொண்டர்கள் கூடினர். ஸ்டாலின் 4 புறமும் சுழன்று சுழன்று தொண்டர்களைப் பார்த்தபடி பேசி, கட்சியின் வேட்பாளர் ஜி.செல்வத்துக்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது, கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களும் அவர்களது கொடியுடன் பங்கேற்று ஸ்டாலினை வரவேற்றனர். கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் தா.மோ.அன்பரசன் உடனிருந்தார்.