

நாட்டில் காங்கிரஸுக்கு எதிராக கோப அலை வீசுகிறது என்றும், பாஜக வெற்றி பெற்றாலும் அக்கட்சியால் மக்கள் விரோத ஆட்சியைதான் தர முடியும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறினார்.
திருவாங்கூரில் உள்ள பதன்மிதிட்டா என்ற பகுதியில், மார்க்சிஸ்ட் வேட்பாளர் பிலிப்போஸ் தாமஸை ஆதரித்து அவர் இன்று பேசியது:
"ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மக்களுக்கு எதிராக காங்கிரஸ் மேற்கொண்ட மக்கள் விரோத கொள்கைகளை மறந்திட முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்க்க பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமைகளுக்கு இந்த தேர்தலில் காங்கிரஸ் பாடம் கற்றுவிடும். காங்கிரஸுக்கு எதிராக கோப அலை நாட்டில் வீசுகிறது.
விலைவாசியை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது. பெட்ரோல் விலை 26 முறை உயர்த்தப்பட்டது. டீசல் விலை மாதா மாதம் உயர்கிறது. வேலை வாய்ப்புக்கு வழியே இல்லை. விவசாயிகள் தற்கொலை, ஊழல் முதலானவை எல்லாம் காங்கிரஸ் ஆட்சியின் தனித்தன்மை.
2ஜி அலைக்கற்ற ஊழலில் ரூ.1.76 லட்சம் கோடி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1.86 லட்சம் கோடி, எரிவாயு விலை உயர்வில் ரூ.1 லட்சம் கோடி ஊழல் என்பதுதான் காங்கிரஸ் ஆட்சியில் பொது கருவூலத்தின் இருப்புநிலை.
பாஜகவின் ஒரே கொள்கை, இந்தியா முழுவதையும் குஜராத் மாதிரியாக மாற்றுவதுதான். குஜராத் முதல்வரும் அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் முதலாளிகளின் ஆதரவும் உள்ளது. இந்த முதாலாளிகள் நோக்கம் அரசாங்கத்திடமிருந்து பெருவாரியான சலுகைகளை பெற வேண்டும் என்பது மட்டுமே. இவர்களால் மீண்டும் மக்கள் விரோத ஆட்சி மட்டுமே தர முடியும்.
வரும் மக்களவைத் தேர்தலில் கேரளாவிலிருந்து அதிகபடியான தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்று, தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் நிலையை மொத்தமாக மாற்ற வேண்டும்" என்றார் பிரகாஷ் காரத்.