

காஞ்சி அமுதன் - ஒருங்கிணைப்பாளர், பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம்
விவசாயம் ஓர் ஆற்றின் வயதை, அதன் மணலின் அளவை வைத்து அறியலாம். பாலாற்றில் சுமார் 80 அடி ஆழம்வரை மணல் படிந்துள்ளது. இதன் மூலம் பாலாற்றின் வயது பல லட்சம் ஆண்டுகள். ஆனால், ஆட்சியாளர்கள் பாலாற்று மணலை வரைமுறையின்றிச் சுரண்டியுள்ளனர். இதனால், 50 அடி ஆழத்தில் கிடைத்துவந்த நிலத்தடி நீர், 1,000 அடி தோண்டினாலும் கிடைப்பதில்லை. நிலத்தடி நீர் வற்றிவிட்டதால், பெரும்பாக்கம் பாலாற்றங்கரையில் இருந்த அரசு விதைப் பண்ணையும் மூடப்பட்டுவிட்டது.
காஞ்சிபுரம் பட்டு, உலக அளவில் பேசப்பட அதன் சாயமும் ஒரு காரணம். பாலாற்று நீரில் வேதி உப்புகள் கிடையாது. அதனால், பட்டுக்குக் கொடுக்கும் சாயம் சிறப்பாக வரும். மணல் கொள்ளையால் பாலாறு வற்றி, காஞ்சிபுரம் பட்டும் தனித்தன்மை இழந்துவிட்டது.
ரயில் நீர் என்ற பெயரில் செங்கல்பட்டு அடுத்த பாலூரில் நிலையம் அமைத்து பாலாற்று நிலத்தடி நீரை உறிஞ்சுகிறார்கள். 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் என்கிற ஒப்பந்தத்தை மீறி அந்தத் தண்ணீரை 2,000 கிலோ மீட்டர் தொலைவுக்கும் மேல் கொண்டுசென்று விற்கிறார்கள். பாலாற்றில் 1840-ல் ஆங்கிலேயர் காலத்தில் புதுப்பாடி அருகே தடுப்பணை கட்டப்பட்டது. அதன் பிறகு, ஒரு தடுப்பணைகூடக் கட்டப்படவில்லை. பாலாற்றில் இனி ஆண்டு முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்படப்போவதில்லை. அதனால், கற்கள் மோதி மணல் உருவாகப்போவதில்லை. எனவே, இருக்கும் மணலையாவது அரசு காக்க வேண்டும்