மம்தாவின் ஓவிய விற்பனை குறித்த விமர்சனம்: மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு - மோடிக்கு எச்சரிக்கை

மம்தாவின் ஓவிய விற்பனை குறித்த விமர்சனம்: மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு - மோடிக்கு எச்சரிக்கை
Updated on
1 min read

மம்தா பானர்ஜியின் ஓவிய விற் பனை குறித்து விமர்சனம் செய்த நரேந்திர மோடி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், அவர் மீது அவதூறு வழக்கு தொடருவோம் என திரிணமூல் காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், ஸ்ரீராம்பூரில் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், “மம்தா பானர்ஜியின் ஓவியங்கள் ரூ.4 லட்சம், ரூ.8 லட்சம் அல்லது ரூ.15 லட்சம் என விற்பனையாகிறது. ஆனால் ஒரு ஓவியம் ரூ.1.8 கோடிக்கு விற்பனையானதன் காரணம் என்ன? அந்த ஓவியத்தை இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியது யார்? திடீரென உங்கள் திறனை அவர்கள் கண்டறிந்தது எப்படி? இதை மேற்கு வங்க மக்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றனர்” என்றார்.

இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் முகுல் ராய் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “மம்தா பானர்ஜி மீதான குற்றச்சாட்டை மோடி நிரூபிக்க வேண்டும். அல்லது மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிடில் அவர் மீது நாங்கள் அவதூறு வழக்கு தொடருவோம்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டு தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. இது குறித்து எங்கள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளோம்.

2004, 2006-ல் மம்தாவின் ஓவிய விற்பனை மூலம் கிடைத்த தொகை அறக்கட்டளை மற்றும் அரசு நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள் ளது. அதன் பிறகு கிடைத்த தொகை கட்சியின் பத்திரிகையை நடத்த செலவிடப்படுகிறது. எந்த வொரு ஓவியமும் அதிக விலைக்கு விற்கப்படவில்லை” என்றார்.

‘மம்தா ஓவியத்தை நான் வாங்கவில்லை’

இதனிடையே பல கோடி ரூபாய் சாரதா சிட்பண்ட் மோசடியில் முக்கிய குற்றவாளியான சுதிப்தா சென், நேற்று ஷியாம்லால் சென் கமிஷன் முன் விசாரணைக்காக கொண்டுவரப்பட்டார். அப்போது, “மம்தா பானர்ஜியின் ஓவியத்தை ரூ.1.8 கோடிக்கு வாங்கினீர்களா?” என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு, “முதல்வரின் ஓவியத்தை நான் வாங்கவில்லை” என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in