நரேந்திர மோடி மீது வழக்கு: தேர்தல் ஆணையம் அதிரடி

நரேந்திர மோடி மீது வழக்கு: தேர்தல் ஆணையம் அதிரடி
Updated on
2 min read

குஜராத் மாநிலம் காந்திநகரில் புதன்கிழமை வாக்களித்துவிட்டு வந்த பிறகு கட்சியின் தாமரைச் சின்னத்தை காட்டி பேசியது தொடர்பான சர்ச்சையில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் புதன்கிழமை 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த தகவலை அகமதாபாத் காவல்துறை ஆணையர் சிவானந்த் ஜா நிருபர்களிடம் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான பதிலையும் ஆணையத்துக்கு அனுப்பிவிட்டதாக அவர் மேலும் சொன்னார்.

வாக்களித்துவிட்டு வந்த மோடி, தனது கையில் கட்சி சின்னத்தை ஏந்தியபடி பாஜகவுக்கு வாக்களிக் கும்படி வெளிப்படையாக கோரிக்கை விடுத்தார் என புகார் எழுந்தது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளை மோடி மீறியதாக தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சட்டத்துறை செயலர் கே.சி.மிட்டல் புகார் செய்தார். மோடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காந்திநகரில் மோடி வாக்களிக்கச் சென்றதை தொலைக் காட்சி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பின. வாக்களித்து விட்டு வெளியே வந்த அவர் பாஜகவுக்கும் தனக்கும் ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்வதையும் விரலில் இடப்பட்ட மையை காட்டி யபடி பேசுவதையும் சேனல்கள் காட்டின. நடத்தை விதி மீறலுக்காக மோடியை தகுதி நீக்கம் செய்யலாம் என்று தனது புகாரில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வாக்களித்து விட்டு வெளியே வந்து மோடி உரையாற்றும் வீடியோ பதிவை பார்த்த பிறகு மோடிக்கு எதிராக புகார் பதிவுசெய்யும்படி மாநில நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குஜராத் மாநிலம் முழுவதிலும் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்காளர்கள் மத்தியில் சின்னத்தை காட்டி மோடி பேசியது 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126(1)(ஏ), 126(1)(பி) ஆகிய பிரிவுகளில் உள்ள விதிகள் மீறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது.

இந்த அரசியல் பேச்சின் நோக்கம், அகமதாபாத் மட்டும் அல்ல குஜராத் மாநிலத்தின் பிற தொகுதிகள் மற்றும் நாட்டின் வேறு பகுதிகளில் புதன்கிழமை நடக்கும் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் வகையிலும் வாக்காளர்களின் மனோநிலையை மாற்றவைப்பது போலவுமே இருப்பது தெரிகிறது.

எனவே, நரேந்திர மோடி மீதும் ஆட்களை கூட்டி இந்த கூட்டம் நடக்க காரணமாக இருந்த மற்ற அனைவர் மீதும் புகார் அல்லது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று மாநில நிர்வாகத்துக்கு உத்தரவிடப்படுகிறது என தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை நிறை வேற்றியது தொடர்பான அறிக்கையை மாலை 6 மணிக்குள் அனுப்பி வைக்கும்படியும் மாநில காவல் துறை தலைவர், தலைமைச் செயலருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

வாக்குப்பதிவு நிகழ்ந்துவரும் நிலையில் தேர்தல் விவகாரத்தை ஒளிபரப்பியதாக, சின்னத்தை காட்டி மோடி பேசியதை ஒளிபரப்பிய தொலைக்காட்சி சேனல்கள் உள்ளிட்ட மின்னணு ஊடகங்கள் மீதும் 126(1)(பி) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க தனியாக புகார் அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in