

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஸ்திரத்தன்மை வாக்குறுதி நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரித்துள்ளார். கேரள மாநிலம், எர்ணாகுளம் பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்த அவர் கூறியதாவது:
2009 மக்களவைத் தேர்தலின் போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. இந்நிலை யில் வரும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.
நரேந்திர மோடியை வாரணாசி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி யிருப்பதன் மூலம் மக்களுக்கு இப்போதே ஒரு தெளிவான சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடிதான் கட்சியின் தேர்தல் அறிக்கை. அவரது பின்னணியில் இந்துத்துவா சக்தி இருக்கிறது என்பது தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடி உறுதி அளித்துள்ள ஸ்திரத்தன்மை நமது நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி அண்மையில் அளித்த பேட்டியில் இடதுசாரி கட்சிகள் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதுகுறித்து பிரகாஷ் காரத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு என்று பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி இவ்வாறு கூறியிருப்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்திக்கும் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸை மக்களே நிராகரிக்கும்போது அவர்கள் எப்படி மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்று பிரகாஷ் காரத் கேள்வி எழுப்பினார்.