

பாஜக தலைமையிலான கார்ப் பரேட்- வகுப்புவாத சக்திகளின் கூட்டணி ஆட்சியில் அமர மேற்கொள்ளும் முயற்சியை அரசியல் அமைப்புகளும் பொதுமக்களும் முறியடிக்க வேண்டும் என கல்வியாளர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திரை இயக்குநர்கள் குமார் ஷஹானி, சயீத் மிர்ஸா, கலைஞர்கள் அர்பணா கௌர், விவன் சுந்தரம், திரையுலக பிரபலங்கள் எம்.கே.ரைனா, அனுராதா கபூர், பத்ரிரைனா, கல்வியாளர்கள் இர்பான் ஹபீப், பிரபாத் பட்நாயக், அமியா குமார், பக்சி, ஜெயந்தி கோஷ், ஹர்பன்ஸ் முகியா, சி.பி.சந்திரசேகர், சக்திகாக், ஆஷ்லி டெலிஸ், அனில் சடகோபால், டி. என். ஜா, கே.எம்.ஸ்ரீமலி உள்ளிட்ட 60 பேர் கையெழுத்திட்டுள்ள இந்த அறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:
இந்து தேசியத்தை உருவாக்குவதில் தீவிரம் காட்டிவரும் அமைப்புக்கு ஆதரவாக உள்ள அரசியல் சக்திகள் இந்த தேர்தலில் வெற்றி கண்டு ஆட்சியில் அமர கடும் முனைப்பு காட்டி வருகின்றன. சுதந்திர இந்தியா இதுவரை கண்டிராத நிலைமை இது. இந்த சக்திகளுக்கு பலமிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் அரவணைப்பும் ஆதரவும் இருக்கிறது.
2002-ல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கொலைக்களத்துக்கு தலைமை தாங்கி அதில் தனக்கு உள்ள பங்குக்காக இதுவரை மன வருத்தம் தெரிவிக்க முன்வராத நபர்தான் இந்த சக்திகளை தலைமை ஏற்று வழி நடத்துபவர்.
கார்ப்பரேட்-வகுப்புவாத சக்திகளின் கூட்டணி, ஆட்சியை பிடித்தால் அது நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் எதிர் காலத்துக்கே உலைவைத்துவிடும்.
பொறுப்புமிக்க தனி நபர்களும் அரசியல் அமைப்புகளும் நிலைமையை சீர்தூக்கிப் பார்த்து மதச்சார்பற்ற ஜனநாயகத்தை கட்டிக்காத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வாக்களித்து கார்ப்பரேட்- வகுப்புவாத சக்திகளின் கூட்டணியின் ஆட்சி அதிகாரத்தில் அமரும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.