

சிதம்பரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திர சேகரை ஆதரித்து, காட்டுமன்னார் கோவிலில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியது: திமுக தலைவர் ஸ்டாலின் திட்டங்களைப் பற்றி பேசாமல் எங்களை திட்டி பேசுகிறார். தனி நபர் விமர்சனங்கள் செய்கிறார். வன்னியர் சொத்துகளை நாங்கள் அபகரித்து விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார்.
எங்கள் குடும்பமோ, கட்சியோ இந்த சொத்துகளை அபகரிக்கவில்லை. அதனால் எங்களுக்கு பயமில்லை. அதை எதிர் கொள்ள நாங்கள் தயார்.
ஸ்டாலின் எந்த சிபிஐ விசாரணை வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம். அப்படி நிரூபிக்காதபட்சத்தில் அவர் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.
மத்திய உளவுத்துறையின் அறிக்கை திமுக - காங்கிரஸ் கூட்டணி தோற்கும் என தெரிவித்துள்ளது. அதனால் ஸ்டாலின் தோல்வி பயத்தில் விரக்தியோடு பேசிவருகிறார். அவரைப்போலவே அவருடைய மகன் உதயநிதியும் பேசுகிறார். நான்கு சினிமாவில் நடித்து, நடிகைகளோடு எல்லாம் சுத்தி கொண்டு, அரசியல் என்றால் என்ன என்று தெரியாமல் சுற்றிக்கொண்டு இருந்த அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
திமுக 70 ஆண்டு கால கட்சி. அண்ணா தொடங்கியது. கருணாநிதி நடத்தினார். பின்னர் ஸ்டாலின் கையில் மாட்டி விட்டது. இவருக்கு ஆளுமை தலைமைப் பண்பு என்று எதுவும் கிடையாது- ஸ்டாலின் கட்சியை நடத்தவில்லை.
நான்கு சின்ன பசங்க இந்த கட்சியை நடத்தி வருகின்றனர் என்றார்.